Ads (728x90)

நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காகவும் ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளின் பெறுபேறுகள் பாராட்டத்தக்கவை என ஐக்கிய அமெரிக்காவின் பதில் கடமையாற்றும் உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வெல்ஸ் அம்மையார் தெரிவித்துள்ளார். 
பல்வேறு விமர்சனங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் ஜனாதிபதி மேற்கொள்ளும் இந்த வரலாற்றுரீதியான நடவடிக்கைகளின் வெற்றிக்கு ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்த ஐக்கிய அமெரிக்காவின் பதில் கடமையாற்றும் உதவி இராஜாங்க செயலாளர் தெரிவித்தார். 

நீதி, சமத்துவம், இன நல்லிணக்கம், சகவாழ்வு, அரசியலமைப்பு திருத்தங்கள், நிலையான சமாதானம் போன்ற அனைத்து துறைகளிலும் இலங்கை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாக ஐக்கிய அமெரிக்கா நம்புவதாகவும் எலிஸ் வெல்ஸ் அம்மையார் இதன்போது தெரிவித்தார். 
நல்லிணக்க செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்வதில் பல்வேறு தடைகள் காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அரசியல்ரீதியான இலாபங்களை பெறுவதற்காக மக்களை தூண்டுவதற்கு சில இனவாத சக்திகள் முயற்சிப்பதுடன், நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் தடைகளை ஏற்படுத்துகின்றன. எனினும் எக்காரணத்திற்காகவும் தனது பாதையை மாற்றப்போவதில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். 
நல்லிணக்க செயற்பாடுகளின் பெறுபெறுகள் துரிதமானதாக இல்லாவிடினும், நிலையான ஒரு குறிக்கோளுடன் வெற்றிகரமாக முன்னோக்கி பயணிப்பதாக ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார். 
அண்மையில் தெற்காசியா மற்றும் பசுபிக் வலயத்திற்கான அமெரிக்காவின் புதிய தந்திரோபாய செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய அமெரிக்காவின் பதில் கடமையாற்றும் உதவி இராஜாங்க செயலாளர், இத்திட்டத்தின் முக்கிய அங்கத்தவராக இலங்கையும் செயற்படும் என ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 
அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளுக்கான மிலேனியம்  சவால்கள் கூட்டுறவு நிறுவனத்தின் உதவிகளை அண்மையில் இலங்கைக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எலிஸ் வெல்ஸ் அம்மையார் இதன்போது தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம், அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷப் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget