ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்று செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கு பின்னரான சூழல் தொடர்பில் கண்காணிக்கும் முகமாகவே அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர்.
குறித்த விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிட பிரதிநிதி போல் கொட்பிரி, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்ததன் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள களநிலைவரங்களை ஆராய்வதற்கென ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் அடங்கிய குழு செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து முதற்கட்ட கணிப்பீடுகள் தொடர்பில் ஆராயும்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்டு இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜி. எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பான 27 நிபந்தனைகளை இலங்கை எந்தளவு செயற்படுத்தி காட்டியுள்ளது என்பது தொடர்பில் இவ்விஜயத்தின்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
இலங்கை மிக முக்கியமாக அமுல்படுத்திக்காட்டுவதாக உறுதியளித்த உறுப்புரைகள் மற்றும் அமுலாக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய தரப்புகளுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
சர்வதேச தரநிர்ணயங்களுக்கேற்ப கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான அனைத்து செயற்திட்டங்களையும் இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவிடம் இலங்கை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜி.எஸ்.பி வரிச்சலுகையின் பின்னர் இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வருடமொன்றுக்கு 2.6 பில்லியன் யூரோக்களை வழங்குகின்றது. இதன்படி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இலங்கை தொடர்பான திறனாய்வு கணிப்புக்களையும் இலங்கை மேற்கொள்ளும். அதன்படி முதலாவது கண்காணிப்பை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் இரண்டாவது கண்காணிப்பை 2020 ஆண்டும் மேற்கொள்ளவுள்ளது.
Post a Comment