எல்.எம்.எஸ். கிரிக்கெட் என்று அழைக்கப்படும் லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் கிரிக்கெட்டின் உலகக் கிண்ணத் தொடருக்கான தெரிவுப் போட்டிகள் நாளை ஆரம்பமாகின்றன.
தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள எல்.எம்.எஸ். உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு இலங்கையிலிருந்து பங்குபற்றும் அணியை தெரிவுசெய்யும் போட்டித் தொடரே நாளை ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் கிரிக்கெட் போட்டியானது சாதாரண கிரிக்கெட்டினை விட சற்று வித்தியாசமாக இருக்கின்றது.
அணிக்கு 8 பேர் மாத்திரமே விளையாடக்கூடிய இவ்வகை கிரிக்கெட் போட்டியில் 7ஆவது விக்கெட்டினை தொடர்ந்து இறுதித் துடுப்பாட்ட வீரர் தனியாக நின்று ஆட்டமிழக்கும் வரை துடுப்பாட முடியும். இதனாலேயே, இப்போட்டிகள் லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் (இறுதி மனிதர் வரை) என்று அழைக்கப்படுகின்றது.
அனைவரையும் கவர்ந்திழுத்த இந்த விளையாட்டானது, தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனதுடன், அதன் விளைவாக தற்போது பல நாடுகளில் வீரர்களால் இவ்விளையாட்டு விரும்பி விளையாடப்பட்டு வருகின்றது.
இந்த புதுவித கிரிக்கெட்டினை உலகிற்கு அறிமுகம் செய்த இவ்விளையாட்டின் ஸ்தாபகர்கள் தற்போது இதற்காக சர்வதேச மட்டத்திலான தொடர்களை நடத்தி வருகின்றனர்.
அவ்வகையான சுற்றுத் தொடர்களில் ஒன்றாக காணப்படும், லாஸ்ட் மேன் ஸ்டான்ட் உலக சம்பியன்ஷிப் தொடர் இரு வருடங்களுக்கு ஒரு முறை உலகின் பல நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படும் அணிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்று வருகின்றது.
இவ்வருடத்திற்கான உலக சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெறவுள்ளது.
இம்முறைக்கான “லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் ஸ்ரீலங்கா” கிரிக்கெட் தொடரின் வெற்றியாளர்கள் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பர்.
இத்தொடருக்கான அனுசரணையை “லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் ஸ்ரீலங்கா” வழங்குகின்றது. இப்பந்தய தொடரில் வெற்றி பெறும் அணியானது 2017 ஆம் ஆண்டிற்கான லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் உலக சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க முடியும்.
உலகக் கிண்ணத் தொடருக்கான தெரிவுப் போட்டித் தொடரில் இம்முறை 30 அணிகள் போட்டியிடுகின்றன.
இந்தத் தொடரின் முதல் கட்ட போட்டிகள் நாளை மத்தேகொட இராணுவ மைதானத்தில் ஆரம்பமாகின்றன. அதன்பிறகு எதிர்வரும் மூன்றாம் திகதியும் 10ஆம் திகதியும் முதல்கட்டப் போட்டிகள் நடைபெறும்.
இந்தத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கொழும்பு மூர்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment