ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், தாய்லாந்து முன்னாள் பிரதமர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா. 2011ல் நடந்த தேர்தலில் அவரது தலைமையிலான பியு தாய் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இதையடுத்து தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமராக அவர் பதவி ஏற்றார். இவர் பதவி வகித்த போது மானிய விலையில் விவசாயிகளுக்கு அரிசி வழங்கியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து 2014ல் யிங்லக்கை பதவியில் இருந்து ராணுவம் நீக்கியது. தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடக்கிறது. ராணுவ தளபதி பிரயூத் ஜான் ஓச்சா என்பவர் தற்போது பிரதமராகவும் பதவி வகித்து வருகிறார்.பதவி நீக்கம் செய்யப்பட்ட யிங்லக் மீதான ஊழல் வழக்கு தாய்லாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.
இதை எதிர்பார்த்து யிங்லக் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர். ஆனால், யிங்லக் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவரது சார்பில் ஆஜரான வக்கீல் நோராவிட் லார்லாலங் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் யிங்லக்கிற்கு காதுவலி என்றும் அதனால் அவரால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதைப்படித்து பார்த்த நீதிபதி கால அவகாசம் வழங்க மறுத்து விட்டார்.
யிங்லக்கிற்கு காதுவலி வந்து இருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்த நீதிபதி அவரை கைது செய்து செப்டம்பர் 27க்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த வழக்கில் குறைந்தபட்சம் யிங்லக்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே ஊழல் வழக்கில் தொடர்புடைய முன்னாள் வர்த்தக அமைச்சருக்கு நீதிமன்றம் 42 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. எனவே தனக்கும் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என பயந்த அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என கருதப்படுகிறது. இவரது அண்ணன் தக்ஷின் ஷினவத்ராவும் முன்னாள் பிரதமராக இருந்தார்.
கடந்த 2006ல் ஆண்டு நடந்த ராணுவ புரட்சியில் அவர் பதவி விலகினார். தற்போது நாடு கடத்தப்பட்ட அவர் துபாயில் தங்கியுள்ளார். எனவே கம்போடியா வழியாக துபாய் சென்று அவருடன் யிங்லக்கும் இணைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment