அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முக்கிய ஆலோசகர் (போர் வியூகம்) ஸ்டீவ் பன்னன் நேற்று முன்தினம் பதவி விலகினார்.
இதுகுறித்து அதிபரின் வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு செயலாளர் ஹுக்காபி சாண்டர்ஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிபரின் போர் வியூக தலைமை ஆலோசகர் ஸ்டீவ் பன்னன் வெள்ளிக்கிழமையுடன் பதவி விலகுவதாக தெரிவித்தார். இதை வெள்ளை மாளிகை ஊழியர்கள் பிரிவு தலைவர் ஜான் கெல்லி ஏற்றுக் கொண்டார். இதுவரை பணியாற்றிய பன்னனுக்கு நன்றி. அவருக்கு வாழ்த்துகள்” என்றார்.
அதிபரின் ஆலோசகராக ஸ்டீவ் பன்னன் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து செய்தி வெளியிட்ட டைம் பத்திரிகை, மிகவும் திறமையானவர் என பன்னனை குறிப்பிட்டிருந்தது.
டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல உயர் அதிகாரிகள் பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளை மாளிகை ஊழியர்கள் பிரிவு தலைவராக ஓய்வுபெற்ற ஜெனரல் ஜான் கெல்லி பொறுப்பேற்றுக் கொண்ட 3 வாரங்களில், பன்னன் பதவி விலகி உள்ளார்.
சில முஸ்லிம் நாட்டினர் அமெரிக்கா வர தடை விதிக்குமாறும் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை திரும்பப் பெறுமாறும் ஆலோசகர் என்ற வகையில் பன்னன்தான் ட்ரம்புக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
Post a Comment