Ads (728x90)

ம் அன்றாட உணவில் கட்டாயம் இடம்பெறுவது குழம்பு. ``தினமும் குழம்பு சாதமா?’’ என்று உதடு பிதுக்குபவர்கள்கூட, அதில் சுவையும் மணமும் தூக்கலாக இருந்தால்... `ஒன்ஸ்மோர்’ கேட்டு `அடுத்த ரவுண்ட்’டுக்கு தயாராகிவிடுவார்கள். கைப்பக்குவத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்! சமையல்கலையில் நீண்டகால அனுபவமும், அளவற்ற ஆர்வமும் கொண்ட நங்கநல்லூர் பத்மா, இந்த இணைப்பிதழில் உங்களுக்காக சாம்பார், வற்றல் குழம்பு, மோர்க்குழம்பு, மசியல், பிட்லை, மிளகூட்டல் என விதம்விதமாக தயாரித்து, `குழம்பு மேளா’வே நடத்தி அசத்துகிறார்.
உங்கள் டைனிங் அறையில் பாராட்டுக் குரல்கள் ஒலிக்கட்டும்!

மணத்தக்காளி வற்றல் குழம்பு
தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். பிறகு, மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு... கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

அப்பளக் குழம்பு
தேவையானவை: புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், அப்பளம் - 2, கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு, சாம்பார் பொடியை சேர்த்து வறுக்கவும். பிறகு, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
காய்கறிகள் கைவசம் இல்லாத சமயத்தில், இந்தக் குழம்பு கை கொடுக்கும்.

கறிவேப்பிலை குழம்பு
தேவையானவை: கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு, மிளகு - 10, காய்ந்த மிளகாய்  - 2, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சைப் பழ அளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கிக்கொள்ளவும். அதே வாணலியில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் புளியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
சூடான சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்.

சுண்டைக்காய் சாம்பார்
தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - 100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், புளி -  எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் -  தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை வேகவைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை தட்டிப் போட்டு வதக்கவும். புளியைக் கரைத்து இதனுடன் சேர்த்து... உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, வேகவைத்த பருப்பை சேர்க்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பை தாளித்து சேர்த்து, பெருங்காயத்தூளையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

கலவைக் காய் சாம்பார்
தேவையானவை: அவரைக்காய் - 4, பறங்கிக்காய் - ஒரு சிறு துண்டு, கத்திரிக்காய், கேரட், பச்சை மிளகாய் - தலா ஒன்று, புளி -  எலுமிச்சைப் பழ அளவு, துவரம்பருப்பு - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை வேகவைக்கவும். அவரைக்காய், பறங்கிக்காய், கத்திரிக்காய், கேரட் ஆகிய வற்றை நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய காய்கறிகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி,  புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவைக்கவும். காய்கள் வெந்ததும் துவரம்பருப்பை சேர்த்து, நன்கு கொதித்த உடன் இறக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்க்கவும்.

சின்ன வெங்காய சாம்பார்
தேவையானவை: சின்ன வெங்காயம் - 20 (தோல் உரிக்கவும்), புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை குழைவாக வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சிறிது வதக்கி, கொஞ்சம் தண்ணீர் விட்டு, கொதித்ததும் புளியைக் கரைத்து ஊற்றி... உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.  எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

மிளகு மோர்க்குழம்பு
தேவையானவை: கெட்டியான மோர் - 500 மில்லி, மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம், அரிசி - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... மிளகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், அரிசியை  வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். இந்த விழுதை மோருடன் கலந்து, உப்பு சேர்த்து வாணலியில் ஊற்றி ஒரு கொதி விட்டு... சிறிதளவு எண்ணெயில் கடுகை தாளித்து இதனுடன் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். தேவைப்பட் டால், வேகவைத்த சேப்பங் கிழங்கு சேர்த்து செய்யலாம்.

கலவைக் கீரைக்குழம்பு
தேவையானவை: முருங்கைக்கீரை, முளைக்கீரை, தூதுவளைக் கீரை - தலா ஒரு கைப்பிடி அளவு, துவரம்பருப்பு - 100 கிராம், புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - இரண்டு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கீரைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கீரைகளை வதக்கிக்கொள்ளவும். வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி... சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். இதனுடன் வதக்கிய கீரையை சேர்த்துக் கிளறி, வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: கீரைகளை அடிக்கடி உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

மொச்சை சாம்பார்
தேவையானவை: உலர் மொச்சை - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், புளி -  எலுமிச்சைப் பழ அளவு, தேங்காய்த் துருவல் - சிறிய கப், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,  தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும். தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக் கவும்.
புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த  விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

தேங்காய்ப்பால் சொதிக்குழம்பு
தேவையானவை: பீன்ஸ் - 5, கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய் - தலா ஒன்று, தேங்காய்ப்பால் - 100 மில்லி, கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை: பீன்ஸ், குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கவும். காய்களை, சிறிது எண்ணெய் விட்டு தேவையான உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால் சேர்த்து... கடுகு, வெந்தயம் தாளித்து இறக்கவும்.
குறிப்பு: தேங்காய்ப்பால் சொதிக்குழம்பு, இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷன்.

கீரை மிளகூட்டல்
தேவையானவை: முளைக் கீரை - ஒரு சிறிய கட்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கீரையைப் பொடியாக நறுக்கி வேகவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... சீரகம், தேங்காய்த் துருவல், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, உப்பு சேர்த்து கீரையுடன் கலந்து, வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, வாணலியில் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கீரையுடன் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இதனை சூடான சாதத்துடன் சேர்த்து நெய் விட்டு சாப்பிடலாம். இதே முறையில் எல்லா கீரையிலும் தயாரிக்கலாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget