2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் அடுத்த மாதம் 20-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கியதாவும் இதற்காக, கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு டிபி குழும நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி பணம் அளிக்கப்பட்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. எஸ்ஸார் குழுமம், லூப் டெலிகாம் நிறுவனங்கள் அரசை ஏமாற்றி ஸ்பெக்ட்ரம் அலைவரிசயை பெற்று பயனடைந்ததாகவும் சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. சிபிஐ தரப்பிலும் அமலாக்கப் பிரிவு சார்பிலும் 2 வழக்குகள் தொடரப்பட்டன. ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வாதங்கள் நடந்து முடிந்துவிட்டன. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு தேதியை நீதிபதி ஏற்கெனவே ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால், வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஓ.பி.சைனி, வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் அதிகமாக இருப்பதாலும் தொலை தொடர்புத் துறை சம்பந்தமான தொழில்நுட்ப விவரங்கள் இருப்பதாலும் அவற்றை பரிசீலிக்க போதுமான அவகாசம் வேண்டும் என்றும் அதனால் செப்டம்பர் 20-ம் தேதிக்கு தீர்ப்பு தேதியை ஒத்திவைப்பதாக நேற்று அறிவித்தார்.

Post a Comment