Ads (728x90)

நடிப்பு: அஜித்குமார், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன், சரத் சக்சேனா, பரத் ரெட்டி.
ஒளிப்பதிவு: வெற்றி
இசை: அனிருத்
தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்
இயக்கம்: சிவா

ராணுவத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் அஜித்குமார், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் ஒரே குழுவாகப் பணியாற்றுகின்றனர். இதில் ரகசியப் பொறுப்பில் இருக்கும் அஜித்துக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் அதிநவீன ஆயுதத்தை பூமிக்கு அடியில் வெடிக்கச் செய்து, அப்போது ஏற்படும் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிரிழக்கச் செய்து, அதன்மூலம் ஆதாயம் தேட சில பயங்கரவாத அமைப்புகள் முயற்சிப்பதாக தகவல் கிடைக்கிறது. அந்த ஆயுதங்களைக் கண்டுபிடிக்க அஜித் மற்றும் அவரது குழு முயற்சிக்கிறது. ஆயுதத்தை ஹேக் செய்த அக்‌ஷரா ஹாசனைக் கண்டுபிடித்தால், ஆயுதத்தை இயக்கும் கருவியைச் செயலிழக்கச் செய்யலாம். எனவே, கருணாகரன் உதவியுடன் அக்‌ஷராவைக் கண்டுபிடிக்கிறார் அஜித்.

அவரிடம் விவேக் ஓபராய், அக்‌ஷராவைக் கொன்று, ஆயுதங்களைக் கைப்பற்றச் சொல்கிறார். இதை ஏற்க மறுக்கிறார் அஜித். இதனால், விவேக் ஓபராயின் ஆட்கள் அக்‌ஷராவைக் கொல்கின்றனர். அப்படியே அஜித் கதையையும் முடித்து, ஆயுதங்களை ஆயிரம் கோடிக்கு விற்க முடிவு செய்கின்றனர். தாங்கள் தப்பிப்பதற்காக, ஆயுதங்களை அஜித் கடத்தியதாக பழிசுமத்துகின்றனர். எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அஜித், திடீரென்று உயிருடன் திரும்பி வருகிறார். தன் மனைவி காஜல் அகர்வாலைக் கொல்ல முயற்சிக்கும் விவேக் ஓபராய் மற்றும் அவரது குழுவினரை அவர் எப்படிப் பழிவாங்குகிறார்? தன்மீது ஏற்பட்ட பழியை எப்படித் துடைக்கிறார் என்பது, விவேகம் படத்தின் கதை.

அஜித் தன் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் அல்ல, பிரியாணி விருந்தே படைத்திருக்கிறார். அவரது ஸ்டைலும், சண்டைக்காட்சியில் காட்டும் ஆக்ரோஷமும், தல தலதான் என்று சொல்ல வைக்கிறது. வெளிநாட்டுக் குளிரில் அவர் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அதேவேளையில், பன்ச் டயலாக் பேசி ரசிகர்களை உசுப்பேற்றுகிறார். ஹாலிவுட் ஸ்டைலில் சண்டைக்காட்சிகள் இருப்பதால், அஜித் உயிரைப் பணயம் வைத்து நடித்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் காஜலுக்கு இது சொல்லிக்கொள்ளும்படியான படம். தன் கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார். தன்னைக் கொல்ல வந்த விவேக் ஓபராயின் ஆட்களிடம், 'கண்டிப்பா ஏ.கே வருவார்' என்று சொல்லி, தைரியசாலியாக தன்னை வெளிப்படுத்துகிறார். கிளைமாக்ஸ் காட்சியிலும் அவரது தன்னம்பிக்கை நடிப்பு மிளிர்கிறது. ஹேக்கர் கேரக்டரில் வரும் அக்‌ஷராவுக்கு அதிக வேலையில்லை. 'வாழும்போது ஓடிக்கிட்டே இருந்தேன். இப்ப சாகும்போதாவது ஒரே இடத்துல இருந்து சாகறேனே' என்று அஜித்திடம் சொல்லிக்கொண்டே உயிர் விடும்போது, உருக வைக்கிறார்.

விவேக் ஓபராய் இன்னொரு ஹீரோ என்றாலும், திடீரென்று நண்பன் அஜித்துக்கு துரோகம் செய்து வில்லனாகி, அஜித் ரசிகர்களின் சாபத்தை வாங்கிக் கட்டிக்கொள்கிறார். ஆனால், அவரும் அஜித் மாதிரியே நிறுத்தி நிதானமாக டயலாக் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம். கருணாகரனை சில காட்சிகளிலேயே அம்போ என விட்டுவிடுகிறார்கள். சரத் சக்சேனா, பரத் ரெட்டி, செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக், ஆரவ் சவுத்ரி போன்றோரும் படத்தில் இருக்கிறார்கள். வீரம், வேதாளம் படங்களின் காட்சிகள் அளவுக்கு விவேகம் படத்தின் சில காட்சிகளில் ஈர்ப்பு இல்லை என்றாலும், ஒன்லி ஒன் அஜித்தை மட்டுமே மாஸாகக் காட்டி, அவரது ரசிகர்களைத் திருப்திப்படுத்த முயற்சித்திருக்கிறார், இயக்குனர் சிவா. படம் முழுக்க துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

 இதனால், கதையுடன் ஒன்ற முடியவில்லை. என்றாலும், பைக் சேசிங் காட்சிகள் ஹாலிவுட் தரத்துக்கு புல்லரிக்கச் செய்கிறது. வெற்றியின் கேமரா, கதையை ஒரு மில்லி மீட்டர் கூட மீறாமல், மிக அற்புதமாகப் பயணித்திருக்கிறது. வெளிநாட்டுக் காட்சிகளில் அவரது திறமை பளிச்சிடுகிறது. குறிப்பாக, சுரங்கப்பாதையில் அவரது லைட்டிங் அபாரம். அனிருத் இசையில் பாடல்கள் செம மாஸ். பின்னணி இசையில் ஆங்காங்கே வரும் பேரிரைச்சலைக் குறைத்திருக்கலாம். விவேகம் படம் யாரைத் திருப்திப்படுத்துகிறதோ இல்லையோ, அஜித் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget