சனி கிரகத்தை ஆராய்ந்த நாசாவின் காசினி விண்கலம் தனது 20 ஆண்டு பயணத்தை நிறைவு செய்து சனி கிரகத்திலேயே எரிந்து விழுந்தது. சனி கிரகத்தை ஆராய அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம், இத்தாலி விண்வெளி அமைப்பு, ஏஎஸ்ஐ விண்வெளி ஆய்வு மையம் ஆகியவை சார்பில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் கடந்த 1997 அக்டோபர் 15ல் காசினி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 2004ம் ஆண்டு இது சனி கிரக சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது.அன்று முதல் 800 கோடி கிமீ தூரம் பயணம் செய்து சனிக் கிரகத்தில் இருந்த டைட்டன் உள்பட 6 நிலாக்களை கண்டறிய உதவியது. 4.50 லட்சம் படங்களை எடுத்து நாசாவுக்கு அனுப்பியது. 25 லட்சம் உத்தரவுகளை செயல்படுத்தியது. இதன் மூலம் 635 ஜிபி அறிவியல் தகவல்களை வெளியிட்டது. இதன் மூலம் மிகப்பெரிய வாயு கிரகமான சனி குறித்த பல அற்புத, அரிய தகவல்களை கொடுத்தது. இதுவரை 300க்கும் மேற்பட்ட முறை அது சனி கிரகத்தை சுற்றி வந்துள்ளது. இதன்மூலம் சனி கிரகத்தில் மிகப் பெரிய மீத்தேன் கடல்கள் இருப்பதையும் கண்டுபிடித்தது. 2005ல் டைட்டனைக் கண்டுபிடித்தது. அதன் தொடர்ச்சியாக ஹியூஜன்ஸ் விண்கலம் டைட்டனில் போய் தரையிறங்கி அசத்தியது. இது புதிய சாதனையாகும். பூமியிலிருந்து புறப்பட்ட விண்கலம், வெகு தொலைவில் உள்ள நிலவில் தரையிறங்கியது அதுவே முதல் முறையாகும்.
கடந்த ஏப்ரல் இறுதியில் காசினி விண்கலத்தின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின. கடந்த செவ்வாய்க்கிழமை, டைட்டன் நிலவு அருகே காசினி சென்றது. அதன் பிறகு தனது இறுதிப் பயணத்தை அது தொடங்கியது. நேற்று சனியின் வளிமண்டலத்தில் பாய்ந்து அழித்துக் கொள்ளும்படி கலிபோர்னியாவில் உள்ள பாசடேனாவில் இருக்கும் தரைக் கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு 1 நிமிடம் கழித்து காசினி துண்டு துண்டாக உடைந்து சிதறி எரிந்து விழுந்தது. சுமார் 45 வினாடிகளில் துண்டு துண்டாக சிதறியது. இந்திய நேரப்படி மாலை 5.25 மணிக்கு காசினி விண்கலம் உடனான தொடர்பை கட்டுப்பாட்டு அறை முற்றிலும் இழந்தது.
அறிவிப்பு வெளியிட்ட நாசா
காசினி பயணம் முடிவுக்கு வந்தது குறித்து நாசாவின் ஏர்ல் மைஸ் கூறுகையில் “அனைவருக்கும் வாழ்த்துகள். இது மிகச்சிறந்த பயணம், காசினி மிகச்சிறந்த விண்கலம், நீங்களெல்லாம் மிகச்சிறப்பான குழு. இத்துடன் இந்தப் பயணம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கிறேன்” என்றார். இதை தொடர்ந்து விஞ்ஞானிகள் எழுந்து நின்று கைதட்டினர்.
Post a Comment