ஐ.நா விதித்த 8வது பொருளாதார தடையை மீறி, வடகொரிய நேற்று மீண்டும் சோதித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஜப்பானை கடந்து சென்று பசிபிக் கடலில் விழுந்தது. இதையடுத்து, ஐநா பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசரமாக கூடி ஆலோசித்தது. அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. கடந்த 3ம் தேதி ஹைட்ரஜன் அணு குண்டு சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்காக வடகொரியா மீது கடுமையான தடைகள் விதிக்க வேண்டும் என அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தின. இதையடுத்து, வடகொரியாவின் ஜவுளி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது வடகொரியா மீது விதிக்கப்பட்ட 8வது தடையாகும்.இந்நிலையில், வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சகம் சில தினங்களுக்கு முன் விடுத்துள்ள அறிக்கையில், ‘அமெரிக்கா கொண்டு வந்த மற்றொரு சட்ட விரோத மற்றும் தீய தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ளது. இது சரியான நடவடிக்கையா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வடகொரியா தனது இறையான்மையை பாதுகாக்கவும், தனது பலத்தை அதிகரிக்கவும் இரட்டிப்பு முயற்சி மேற்கொள்ளும்’ என தெரிவித்திருந்தது. அதன்படி, வடகொரியா நேற்று காலை மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது. தலைநகர் யாங்யாங் அருகேயுள்ள பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, ஜப்பானை கடந்து சென்று பசிபிக் கடலில் விழுந்தது. ஜப்பான் பகுதிக்குள் 2 நிமிடங்கள் இந்த ஏவகணை பயணம் செய்தது. ஆனால், எந்த பாகங்களும் ஜப்பான் பகுதிக்குள் விழவில்லை.
இந்த ஏவுகணை வானில் 770 கிமீ உயரத்தில் 3,700 கிமீ தூரம் பயணம் செய்ததாக தென்கொரிய ராணுவ அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் பசிபிக் கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் வடக்கு பகுதியை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது. இந்த ஏவுகணை சோதனையால், வட அமெரிக்காவுக்கோ, பசிபிக் கடல் பகுதியில் உள்ள அமெரிக்காவின் குவாம் பகுதிக்கே எந்த அச்சுறுத்தலும் இல்லை’’ என தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த சோதனையை அடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று அவசரமாக கூடி ஆலோசித்தது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அதற்கு ஆதரவளிக்கும் சீனாவும், ரஷ்யாவும் நேரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
ஜப்பான் மக்கள் பீதி
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து, ஜப்பானில் சைரன் ஒலி மற்றும் அவசர தகவல் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், ஜப்பான் மக்கள் பீதியடைந்தனர். ஜப்பானின் கொக்கைடோ தீவில் ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. டி.வி.க்களிலும் ஏவுகணை வீசப்பட்டது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டன. இது குறித்து ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே அளித்த பேட்டியில், ‘‘உலக அமைதிக்கு அச்சுறுத்தும் இந்த அபாயகரமான செயலை ஜப்பான் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. வடகொரியா தொடர்ந்து இதுபோல் நடந்து கொண்டால், அதற்கு பிரகாசமான எதிர்காலம் இல்லை. இதை வடகொரியாவுக்கு நாம் புரிய வைக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
சீனா கடும் எதிர்ப்பு: ஜப்பானை கடந்து செல்லும் வகையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹூவா சன்யிங் அளித்த பேட்டியில், ‘‘ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதை சீனா எதிர்க்கிறது.’’ என தெரிவித்துள்ளார்
Post a Comment