வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தால் அமெரிக்கா பெரும் துயரத்தையும் வேதனையும் சந்திக்க நேரிடும் என்று அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்தடுத்து அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்திய வடகொரியா மீது ஏற்கெனவே பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அண்மையில் அணு குண்டைவிட பலமடங்கு சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக வடகொரியா வின் அரசு ஊடகம் கே.சி.என்.ஏ. நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகொரியா அணுஆயுத வல்லரசு நாடாக மாறியிருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. அதனால் எங்கள் நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம். நாங்கள் எடுக்கும் நடவடிக்கையால் அமெரிக்கா பெரும் துயரத்தையும் வேதனையும் சந்திக்க நேரிடும். அமெரிக்காவை அழிக்கவும் தயங்கமாட்டோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவின்பேரில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தென்கொரிய உளவு அமைப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன.
ரஷ்யா, சீனா நிலைப்பாடு
“வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிப்பதால் எவ்வித பயனும் இல்லை. அந்த நாட்டுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவதன் மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்” என்று ரஷ்யாவும் சீனாவும் வலியுறுத்தி வருகின்றன. ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதுபோல வடகொரியாவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தலாம் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் யோசனை தெரிவித்துள்ளார்.
வடகொரியா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான போக்கை கடைப்பிடிக்கிறார். அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பில்லை, ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்
Post a Comment