கொரியா தலை நகர் சியோலில் கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.இந்தத் தொடரில் மற்றொரு முன்னணி வீராங்கனையான சாய்னா நெவால் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்தும் விலகி உள்ளார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, கடந்த மாதம் கிளாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். இதனால் கொரியா பாட்மிண்டன் தொடரில் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
சிந்து தனது முதல் சுற்றில் ஹாங் காங்கின் செங் கன் யி-யை எதிர்கொள்கிறார். ஆடவர் பிரிவில் அமெரிக்க ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற இந்திய வீரர் பிரணாய் கலந்து கொள்கிறார். அவர் தனது முதல் சுற்றில் ஹாங் காங்கின் லாங் அங்குஸை சந்திக்கிறார். பிரணாய் கூறும்போது, கடந்த காலங்களில் அங்குஸூடன் சில ஆட்டங்களில் விளையாடி உள்ளேன். அவை மிகவும் கடினமாக இருந்துள்ளது. அவர் ஒரு தந்திரமான வீரரும் கூட. பாதுகாப்பு மற்றும் தாக்குதல் ஆட்டம் என இரண்டையும் கலந்து விளையாடக்கூடியவர். களத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பந்தை அடிக்கும் திறன் கொண்டவர்” என்றார்.
சிங்கப்பூர் ஓபனில் பட்டம் வென்ற இந்திய வீரர் சாய் பிரணீத் தனது முதல் சுற்றில் ஹாங் காங்கின் ஹூ யனை எதிர்த்து விளையாடுகிறார். இதற்கு முன்னர் இருவரும் 4 ஆட்ங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் இருவரும் தலா 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளனர். சையது மோடி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் பட்டம் வென்ற இந்தியாவின் சமீர் வர்மா, தனது முதல் சுற்றில் தாய்லாந்தின் தனோங்சக்குடன் மோதுகிறார்.
காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான காஷ்யப் தகுதி சுற்றில் சீன தைபேவின் லின் யு ஹசியனுடன் மோதுகிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா, ஷிக்கி ரெட்டி ஜோடி தங்களது முதல் சுற்றில் 4-ம் நிலை ஜோடியான இந்தோனேஷியாவின் பிரவீன் ஜோர்டான், டெபி சுசான்டோவுடன் மோத உள்ளது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி, 8-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சுபாஜிராகுல், சப்ஸிரி ஜோடியை எதிர்கொள்கிறது
Post a Comment