
பூமியைப் போல் பொறுமையும், ஆன்மீக நாட்டமும் உடைய நீங்கள், மறப்போம் மன்னிப்போம் என்றிருப்பீர்கள். செய்நன்றி மறவாதவர்கள். 13ந் தேதி வரை செவ்வாய் 6ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். சொன்ன தேதியில் பணத்தை தந்து முடித்து பழைய கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். ஷேர், ரியல் எஸ்டேட் மூலமாகவும் பணம் வரக்கூடும். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். 22ந் தேதி முதல் புதன் உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்களால் இருந்த அன்புத்தொல்லைகள் விலகும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.
பழைய நண்பர்களில் ஒரு சிலர் பெரிய பதவியில், பெரிய பொறுப்பில், பொருளாதாரத்தில் பெரிய நிலையில் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களால் சில உதவிகள் கிடைக்கும். 9ந் தேதி வரை சுக்கிரன் 6ல் மறைந்திருப்பதால் வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். கணவன்மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். 10ந் தேதி முதல் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ல் அமர்ந்து உங்களைப் பார்க்கயிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். பழுதான வாகனம், மின்சார சாதனங்களை சரி செய்வீர்கள். உங்கள் ராசிக்கு 8ல் குரு மறைந்திருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். எதுவாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி ஏமாறாதீர்கள். அவ்வப்போது தூக்கம் குறையும்.
நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்ய தவறாதீர்கள். கொழுப்புச் சத்துள்ள, கார உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ராசிக்கு 7ம் வீட்டில் சூரியன் அமர்ந்ததால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல் நலக் குறைவு ஏற்படும். எனவே உணவில் கீரை, காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் ஆலோசனையை கேட்டு முடிவுகள் எடுப்பது நல்லது. மாணவ, மாணவிகளே! நுழைவுத் தேர்விற்கு இப்போதிருந்தே தயராகுங்கள். கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும்.
வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். பங்குதாரருடன் மனக்கசப்பு வந்து நீங்கும். உத்யோகத்தில் பணிகளை முடிப்பதில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய விமர்சனங்களும், கிசுகிசு தொந்தரவுகளும் வந்து போகும். விவசாயிகளே! பக்கத்து நிலக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். வரப்புச் சண்டை, வாய்க்கால் தகராறு என்று நேரத்தை வீணடிக்காதீர்கள். விளைச்சலில் கவனம் செலுத்துங்கள். சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 18, 19, 20, 21, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 7, 8, 10, 12, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
செப்டம்பர் 22ம் தேதி பிற்பகல் மணி 1.28 முதல் 23, 24ந் தேதி இரவு மணி 11.13 வரை மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும்.
பரிகாரம்:
பிரத்யங்கரா தேவியை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்
Post a Comment