பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அடிப்படையில் அவர் ஜோர்டான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கிறார். அங்கு அவர் சிரியா நாட்டு அகதிகள் முகாமிற்கு சென்று அவர்களை சந்தித்து பேசினார்.அகதிகள் முகாமில் உள்ள சிறுவர் சிறுமிகளுடன் அவர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின் முகாமிலுள்ள பெண்களை சந்தித்து "விரைவில் உங்கள் பிரச்சினை தீரும். நீங்கள் நிம்மதியாக வாழ இறைவன் அருள் புரிவான், உங்களுக்காக பிரார்த்திப்பேன், பணிபுரிவேன்" என்று கூறிவிட்டு வந்திருக்கிறார். அகதிகளை சந்தித்தது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது:
நான் அவர்களை சந்தித்தது மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. உங்களிடம் உள்ள அனைத்தையும் பறித்து விட்டு உங்களை தனியாக நிற்க வைத்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அப்படியான ஒரு சூழலில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், விரைவில் இதிலிருந்து மீண்டு விடுவோம் என்கிற நம்பிக்கை அவர்களிடத்தில் இருக்கிறது. அந்த நம்பிக்கைதான் அவர்கள் முகத்தில் சிறிதேனும் புன்னகையை வர வைக்கிறது. அங்குள்ள குழந்தைகள் எனக்கு உத்வேகத்தை கொடுத்தனர். அவர்கள் நம் குழந்தைகள். என்று எழுதியிருக்கிறார்.
Post a Comment