பேஸ்புக் நிறுவனம் தகவல்களை தவறாக கையாண்டதால் ரூ.9.10 கோடி (12 லட்சம் யூரோ) அபராதம் செலுத்த ஸ்பெயின் நாட்டின் தகவல் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.ஸ்பெயின் நாட்டின் தகவல் பாதுகாப்பு அமைப்பு இது தொடர்பான உத்தரவை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. பயனாளிகளின் தகவல்களை பாதுகாக்கத் தவறியதன் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக கூறியுள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து திரட்டிய தகவல்களை விளம்பர நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதித்ததால் பேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டு பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை திரட்டும் பேஸ்புக் அவர்களிடமிருந்து , அந்த தகவல்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து தெளிவான ஒப்புதலோ அல்லது அது குறித்த தகவல்களோ அளிப்பதில்லை என்று தகவல் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் தங்களது பயனாளிகளிடமிருந்து அவர்களது கருத்தியல், பாலினம், மத நம்பிக்கைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவற்றை திரட்டுகிறது. இந்த தகவல்களை எங்கு பயன்படுத்துகிறது அல்லது எதற்கு பயன்படுத்துகிறது என்கிற விவரங்களை தெளிவாக பயனாளிகளுக்கு அளிப்பதில்லை.
பேஸ்புக் நிறுவனம் தனிநபர் உரிமைகளை மீறுகிறது என்று கூறியுள்ள தகவல் பாதுகாப்பு அமைப்பு, பொதுவான மற்றும் தெளிவில்லாத விதிமுறைகளை பேஸ்புக் கொண்டுள்ளது. இது ஸ்பெயினின் தகவல் பாதுகாப்பு சட்ட விதிகள்படி தீவிரமான விதிமீறலாகும் என்றும் கூறியுள்ளது.
ரூ.9.10 கோடி என்பது பேஸ்புக் நிறுவனத்துக்கு மிகச் சிறிய அபராத தொகையாக இருக்கும். நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு அறிக்கைபடி விளம்பரம் மூலம் 902 கோடி டாலர் (ரூ.58,843 கோடி) வருமானம் ஈட்டியுள்ளது. குறிப்பாக மொபைல் வீடியோ விளம்பரங்கள் மூலம் இந்த வருமானத்தை பேஸ்புக் ஈட்டியுள்ளது.
இந்த அபராதம் குறித்து பேஸ்புக் உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் தகவல் பாதுகாப்புகள் சட்ட சிக்கல்களை உருவாக்கிவருகின்றன. கடந்த மே மாதத்தில் பிரான்ஸ் நாட்டின் தகவல் பாதுகாப்பு அமைப்பு பேஸ்புக் நிறுவனத்துக்கு 1,50,000 யூரோ அபராதம் விதித்திருந்தது. அப்போதும் இதே காரணங்களை பிரான்ஸ் தகவல் பாதுகாப்பு அமைப்பு முன்வைத்தது.
இணையதள பயணிகளிடமிருந்து மிகப் பெரிய அளவில் தகவல்கள் திரட்டப்படுகின்றன. இந்த விவரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட விளம்பரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்று அப்போது பேஸ்புக் கூறியிருந்தது. ஒரு மாதத்தில் சராசரியாக 201 கோடி பயனாளிகள் பேஸ்புக்கை தீவிரமாக பயன்படுத்துகின்றனர்.
Post a Comment