“20ஆவது திருத்தச் சட்டவரைவின் சரத்துக்கள் அரசமைப்புக்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை வெளியிட்டிருந்த போதிலும், அந்தத் தீர்மானத்தில் உரிய காரணங்கள் எதுவும் வழங்கப்பட்டிருக்காமையால் அது தொடர்பில் உயர் நீதிமன்றிடம் நாடாளுமன்றம் சார்பில் விவரம் கோரப்பட வேண்டும்”இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் சபையில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டவரைவின் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசமைப்பின் 123ஆம் உறுப்புரையின் கீழேயே உயர் நீதிமன்றம் அதனது நியாயாதிக்கத்தை செயல்படுத்துகின்றது. உயர் நீதிமன்றத்தின் தீர்மானமானது காரணங்களுடன் அமைந்ததாக இருக்க வேண்டும். அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தில் காரணங்களை அறிந்து கொள்வதில் சிரமம் என்றால் நாம் உயர் நீதிமன்றத்திடம் விவரம் கோர வேண்டும்.
தீர்மானத்தில் காரணங்கள் வழங்கப்பட்டிருந்தாலே தவிர, தேவையான திருத்தங்களை மேற்கொள்வது நாடாளுமன்றத்துக்கு சாத்தியமாக இருக்காது.
யாதுமொரு சட்டவரைவு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு பொது வாக்கெடுப்பொன்றில் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனில், அரசமைப்புக்கு முரணாகக் காணப்படும் அந்தச் சட்டவரைவின் சரத்துக்களில் அரசமைப்புக்கு இணங்கும் வகையில் மேற்கொள்ளப்படக்கூடிய திருத்தங்களின் இயல்பையும் உயர் நீதிமன்றம் குறிப்பிட வேண்டும் என்று அரசமைப்பின் 123(2)(இ) உறுப்புரையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானத்தில் காரணங்கள் குறிப்பிடப்படவில்லை என்பதுடன் மட்டுமல்லாது, நீதியரசர்கள் குழாமின் இரு அங்கத்தவர்களது இணக்கத்துடனும், ஒரு உறுப்பினரது இணக்கமின்றியும் அந்த நீதியரசர்களது பெயர்களைக் கூடக் குறிப்பிடாது இந்தத் தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, நீதியரசர் ஒருவர் இணங்காமைக்கான காரணம்கூட தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. இங்கு காரணங்கள் குறிப்பிடப்படாதது துரதிஷ்டவசமானது. திருத்தங்களும் பரிசீலக்கப்படவில்லை. நீதிமன்ற நடவடிக்கைகளில் நாடாளுமன்றம் தலையிட முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அனுப்பிவைக்கப்பட்ட விடயங்கள் மதிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் முன்செல்லவதில்லை என்று அரசும் தீர்மானித்திருக்கிறது.
அது நாடாளுமன்றத்தை சிரமமான நிலைமைக்குள் தள்ளியுள்ளது. ஆட்சேபத்துக்குரிய சரத்துக்கள் எவை, அவை எவ்வாறு திருத்தப்பட வேண்டும் என்பதை நாடாளுமன்றம் தெரிந்துகொள்ள வேண்டும் – என்றார்.
Post a Comment