‘‘அமெரிக்காவையும் அதன் கூட்டணி நாடுகளையும் அச்சுறுத்தி அடக்கிவிட முடியாது, அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கை தீவிரமாகவும், நசுக்கி அழிப்பதாகவும் இருக்கும்’’ என விமானப்படை நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். ஐ.நா.வின் தடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. கடந்த 3ம் தேதி ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை நடத்திய வடகொரியா, நேற்று முன்தினம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது. இது ஜப்பான் பகுதிக்குள் 2 நிமிடம் பறந்து, பசிபிக் கடலில் விழுந்தது.இந்த சோதனையை அடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தியது. அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சுனோரி ஒனோடெராவிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஜப்பான் எல்லை பாதுகாக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். மெக்சிகோ செல்லும் வழியில் மேட்டிஸ் அளித்த பேட்டி: வடகொரியாவின் ஏவுகணை சோதனையால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் மக்கள் 2வது முறையாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்றும் பதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை அந்நாட்டை தூதரக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேலும் தனிமைப்படுத்தும். சர்வதேச நாடுகளுடன் வடகொரியா இணைந்து செயல்படவில்லை என்பதை மற்ற நாடுகள் உணரத் தொடங்கியுள்ளன. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கவலைகளை வடகொரியா நிராகரித்துள்ளது.
வடகொரியாவின் ஏவுகணையை வீழ்த்த, தென்கொரியா முயற்சி எடுத்ததா என தெரியவில்லை. ஆனால், வடகொரியா ஏவுகணை ஏவப்பட்டதும், சில நிமிடங்களில் ஏவுகணையை ஏவியதாக தென்கொரியா அரசு கூறியுள்ளது. ஆனால், அது குறுகிய தூர ஏவுகணை. அவர்களின் நாட்டை பாதுகாக்கும் அளவுக்கு தென்கொரியாவுக்கு திறன் உள்ளது. இவ்வாறு மேட்டிஸ் கூறினார். இந்நிலையில் அமெரிக்க விமானப்படையின் 70ம் ஆண்டு நிகழ்ச்சியில் நேற்று பேசிய அதிபர் டிரம்ப், ‘‘அண்டை நாடுகளையும், ஒட்டு மொத்த உலக சமுதாயத்தையும், வடகொரியா மீண்டும் அவமதித்துள்ளது. அமெரிக்காவையும், அதன் கூட்டணி நாடுகளையும் அச்சுறுத்தி அடக்கி விட முடியாது. மிரட்டல்களுக்கு அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கை தீவிரமாகவும், நசுக்கி அழிப்பதாகவும் இருக்கும். அச்சுறுத்தல் விடுப்பவர்களிடம் இருந்து நமது மக்கள், நாடு, நாகரீகம் ஆகியவற்றை நாம் பாதுகாப்போம்’’ என்றார்.
டிரம்ப்புக்கு வழிகாட்டும் 3 ஜெனரல்கள்
அமெரிக்காவின் ராணுவ அமைச்சராக மேட்டிஸ், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக ஜான் கெல்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்டர் ஆகியோர் உள்ளனர். இவர்கள் 3 பேரும் ராணுவ உயர் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள். ராணுவ உயர் அதிகாரிகளாக இருந்தவர்களை டிரம்ப் நிர்வாக பதவியில் அமர்த்தியது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. வடகொரியா விவகாரம் குறித்து இவர்களுடன்தான் அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஜெனரல்கள் அதிபர் டிரம்ப்பை சரியாக வழிநடத்துவர் என பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர் ரிச்சர்ட் ப்ளூமென்தால் கூறுகையில், ‘‘கடிவாளம் சரியானவர்களின் கையில் இருப்பதால், இணக்கமான, விவேகமான முடிவு எடுக்கப்படும் என உணர்கிறோம். இல்லையென்றால் வெள்ளை மாளிகை தாறுமாறாக செயல்படும்’’ என கூறியுள்ளார்.
மூன்று ஜெனரல்களையும் நன்கு அறிந்த ஜான் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேசனல் ஸ்டடிஸ்’ பேராசிரியர் எலியட் கோகன் கூறுகையில், ‘‘அதிபர் டிரம்ப் வாயில் இருந்து வரும் அனைத்தையும் ஜெனரல்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அவர்கள் அதிபரின் உணர்வுகளை கட்டுப்படுத்துவார்கள்’’ என்றார்.
Post a Comment