மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டவரைவை அரசு சபையில் சமர்பித்ததுமே, மகிந்த அணியினர் நாடாளுமன்றில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினர். நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கும் நோக்குடன் அவர்கள் பிரச்சினைகளை எழுப்பினர். சட்டவரைவின் திருத்தங்கள் மேற்பார்வைக் குழுவுக்கு அனுப்பி வைக்கவில்லை, மாகாண சபைகளின் ஒப்புதல் பெறப்படவில்லை என்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.சபைக்கு நடுவே வந்து பேரொலி எழுப்பினர். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபருடனான பேச்சுக்களைத் தொடர்ந்தே சபை நடவடிக்கைகள் மீண்டும் சுமுகமாக ஆரம்பமாகின. 20ஆவது திருத்தச் சட்டவரைவை அரசு கைவிட்டது. தேர்தலை ஒத்திவைக்கும் நோக்குடன் மாற்று ஏற்பாடாக மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டவரைவை நாடாளுமன்றுக்கு அரசு கொண்டு வந்தது.
இதனை நாடாளுமன்றில் நேற்று எடுத்துக் கொள்வது தொடர்பில் ஆராயப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே மகிந்த அணி கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. நாடாளுமன்றில் சட்டவரைவு சமர்பிக்கப்பட்டதுமே மகிந்த அணியினர் சன்னதம் கொள்ளத் தொடங்கினர்.
மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா, சட்டவரைவை சபையில் முன்வைத்து பேச ஆரம்பிக்க எழுவதற்கு முன்னரே மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன குறுக்கிட்டார். “அரசமைப்பின் 84ஆவது சரத்தின் பிரகாரம் மாகாண சபையுடன் தொடர்பான சட்டவரைவை மாகாண சபைகளுக்கு அனுப்பிவைத்து மாகாணங்களின் ஒப்புதல் பெறவேண்டும். 20ஆவது சட்டவரைவுக்கு மாகாண சபைகளின் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்தச் சட்டவரைவு மாகாண சபைகளின் ஒப்புதலைப் பெறவில்லை. ஏன் மாகாண சபைகளுக்கு அனுப்பவில்லை?” என்று தினேஸ் குணவர்த்தன கேள்வி எழுப்பினார். மாகாண சபைகளின் அனுமதி பெற வேண்டியதில்லை என்று சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியல்ல மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் கூறினார்.
மகிந்த அணியினர் பேரொலி எழுப்பத் தொடங்கினர். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, “சட்டவரைவின் சரத்துக்களைவிட திருத்தங்கள் அதிகம். மறைமுகமாகத் திருத்தங்கள் கொண்டு வரப்படும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டவரைவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது போகும்.
மாகாண சபையின் ஒப்புதல் இந்தச் சட்டவரைவுக்குப் பெற்றுக் கொள்ளப்படத் தேவையில்லை என்பதற்கு சட்டமா அதிபரின் கூற்று உங்களிடம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார். சபநாயகர் கரு, அதற்கு ஆம் என்று பதிலளித்தார்.
“நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவர் நான். நாம் நாடாளுமன்றுக்கு அனுப்பிய சட்டவரைவு தற்போது சமர்பிக்கப்படவில்லை. பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருத்தங்கள் மேற்பார்வைக் குழுவுக்கு வரவில்லை. இது அநீதி” என்று நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே சத்தமிட்டார்.
“காமினி லொக்குகே தவறான கருத்தை முன்வைத்துள்ளார். நானும் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர். சட்டவரைவை நிறைவேற்றி அனுப்பச் சொன்னவரே அவர்தான்” என்று போட்டுக் கொடுத்தார், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி.
“சட்டவரைவின் திருத்தங்களை மேற்பார்வைக் குழுவுக்கு அனுப்ப வேண்டியதில்லை. குழுக் கூட்டத்தின் போதே திருத்தங்கள் முன்வைக்க வேண்டும். இதற்கும் முன்னர் மேற்பார்வைக் குழுவுக்கு திருத்தங்கள் முன்வைக்கப்படவில்லை. சம்பிரதாயங்களை மீறி எம்மால் செயற்பட முடியாது” என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல காட்டமாகக் கூறினார்.
சபையில் இதன் பின்னரும் மீண்டும் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மகிந்த அணியினரின் நடவடிக்கை எல்லை மீறியது. சூடாகிய சபாநாயகர் கரு, விவாதத்தை நடத்த விடுங்கள் என்று கடும் தொனியில் தெரிவித்தார்.
இதன் பின்னர் அமைச்சர் பைசர் மீண்டும் பேச ஆரம்பித்தார். மகிந்த அணியின் குழப்பங்களை கவனத்திலெடுக்காமல் அவர் தனது உரையைத் தொடர்ந்தார்.
அமைச்சர் பைசரின் உரையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பேச ஆரம்பித்தார். மகிந்த அணியினர் அனைவரும் சபைக்கு நடுவே வந்து செங்கோலுக்கு அருகாமையில் நின்றனர்.
சபாநாயகருக்கு முன்னே நின்று விவாதத்தை உடன் நிறுத்துங்கள், இது முறையற்ற செயற்பாடு என்று அவர்கள் கூச்சமிட்டனர். இதன்போது, சுமந்திரனைப் பார்த்து, “நீங்கள் ஆளும் கட்சியுடன் சென்று அமருங்கள்” என்றும் அவர்கள் கூச்சலிட்டனர்.
மகிந்த அணிக்குச் சவால்விடும் வகையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபை நடுவே வந்தனர். சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உரை முடிந்ததும், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபருடன் நண்பகல் 12 மணிக்குப் பேசுவதாகத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார். இதனையடுத்தே மகிந்த அணியினர் அடங்கினர்.
சட்டமா அதிபரும் பேச்சு நடத்தும் நோக்கில் 12 மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். 11.20 மணிக்கு சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இதன் பின்னர் மதியம் 1.30 மணிக்கே சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. “திருத்தங்களை மேற்பார்வைக் குழுவுக்கு அனுப்ப வேண்டியதில்லை. மாகாண தேர்தல் திருத்தச் சட்டவரைவை மாகாண சபைகளுக்கு அனுப்பிவைக்க வேண்டியதில்லை”
என்ற சட்டமா அதிபர் எழுத்துமூலம் அறிவித்தலை சபாநாயகர் வாசித்துக் காட்டிய பின்னர் விவாதம் சுமுகமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
Post a Comment