காற்று மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் 2040க்குள் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடைவிதித்து மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க சீனா திட்டமிட்டு வருகிறது. உலகளவில் ஆட்டோமொபைல் சந்தையில் சீனா முன்னிலை வகித்து வருகிறது. கடந்த ஆண்டில் 2.8 கோடி வாகனங்களை சீனா உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளதாக சர்வதேச மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த ஆண்டில் 5 லட்சத்து 7,000 புதிய ஆற்றல் வாகனங்களை அதாவது மின்சார கார்களை சீனா விற்பனை செய்துள்ளது.அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 53 சதவிகிதம் அதிகம். சீனாவின் ஆட்டோ நிறுவனங்களான பிஒய்டி, பிஏஐசி மற்றும் கீலே போன்றவை கடந்த ஆண்டில் உலகளவில் மின்சார கார்களை அதிக அளவில் விற்பனை செய்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆட்டோமொபைல் மாநாட்டில் கலந்து கொண்ட சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர் சின் குவோபின் கூறுகையில், ‘எரிபொருளில் செயல்படும் கார்களுக்கு தடைவிதிக்கும் ஆய்வை சீனா ஏற்கனவே துவங்கிவிட்டது.
இந்த நடவடிக்கைகள் மூலம் இந்த துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும். வரும் 2040-ல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளின் அறிவிப்புகளை அடுத்து சீனாவும் அதன் வழியில் 2040க்குள் டீசல், பெட்ரோல் கார்களின் உற்பத்தியை தடை செய்ய திட்டமிட்டு வருகிறது’ இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே கார் நிறுவனமான வால்வோ வரும் 2019- ஆரம்பத்தில் தனது அனைத்து மாடல்களுக்கு், மின்சார மோட்டார்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதே போல வோல்க்ஸ்வோகன், போர்டு டாய்ம்லர் போன்ற முன்னணி கார் நிறுவனங்களும் மின்சார கார் உற்பத்தியை வலுப்படுத்த திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment