கொரியா ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் உலக சாம்பியன் நஸோமி ஓகுஹராவுடன் (ஜப்பான்) நேற்று மோதிய சிந்து, கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டில் 22-20 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஓகுஹரா அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 21-11 என்ற கணக்கில் கைப்பற்ற 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால் பரபரப்பு நிலவியது. ஒரு மணி, 23 நிமிடத்துக்கு நடந்த இந்த விறுவிறுப்பான போட்டியில் சிந்து 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் போராடி வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இது அவர் வென்ற 3வது சூப்பர் சீரீஸ் சாம்பியன் பட்டமாகும். கொரியா ஓபனில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் சிந்துவை வீழ்த்தி ஓகுஹரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். அந்த தோல்விக்கு கொரியா ஓபனில் சிந்து பழிதீர்த்துக் கொண்டார். இருவரும் 8 முறை மோதியுள்ளதில் தலா 4 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment