மேற்கிந்தியத் தீவுகள் -மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த ஒருநாள் போட்டி மழையின் காரணமாக இரத்து செய்யப்பட்டது. இதனால் இலங்கை 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு சற்று பிரகாசமாகியுள்ளது.இங்கிலாந்தில் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரானது 10 அணிகள் மட்டுமே போட்டியிடும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
போட்டியை நடத்தும் இங்கிலாந்து தவிர்த்து, 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில், ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் பிற அணிகள் உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதி பெறும். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு மற்ற அணிகள் 'தகுதிச்' சுற்றில் விளையாடித் தகுதி பெற வேண்டும்.
இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் உலகக் கிண்ணத்திற்கு ஏற்கனவே நேரடித் தகுதி பெற்றுவிட்டன.
செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி நிலைவரப்படி இலங்கை 86 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும், மேற்கிந்தியத்தீவுகள் 78 புள்ளிகளுடன் 9ஆ-வது இடத்திலும் இருக்கின்றன. இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முடிவில் இலங்கையைத் தரவரிசையில் முந்தினால் மட்டுமே மேற்கிந்தியத் தீவுகள் அணியால் நேரடித் தகுதி பெற முடியும்.
தற்போது அயர்லாந்துடனான போட்டி நடைபெறாததால் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மேற்கிந்தியத்தீவுகள் முழுமையாக வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment