
இந்திய துணைத்தூதுவர் தலைமையிலான குழுவினருக்கும் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அமைச்சில் இடம்பெற்றது. அமைச்சர் பழனி திகாம்பரத்துடன், அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார் இந்திய தூதுக்குழு சார்பாக துணை உயர்ஸ்தானிகர் அரிந்தாம் பக் ஷி, இணைச்செயலாளர் அமித் குமார், முதன்மைச் செயலாளர் திருமதி சுஜா மேனன், தூதரக அதிகாரி தாஸ் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கடந்த பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்திய வீடமைப்புத்திட்டமானது நல்லாட்சி அரசில் அமைச்சர் திகாம்பரம் பெருந்தோட்ட
உட்கட்டமைப்பு அமைச்சை பொறுப்பேற்றவுடன் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதுடன் தற்போது முதல் கட்டமாக 1134 வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இரண்டாவது கட்டமாக 2866 வீடுகளுக்கான கட்டுமானப்பணிகள் எதிர்வரும் ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது நோர்வூட் மைதானத்தில் மலையக மக்களை சந்தித்து அவர் அறிவித்த 10000 வீடுகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேந்கொள்வதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடலாகவே நேற்றைய சந்திப்பு இடம்பெற்றது.
கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்த இந்திய தூதுக்குழு எதிர்வரும் மூன்றாண்டு காலப்பகுதிக்குள் இந்திய வீடமைப்புத்திட்டத்தின் எஞ்சிய 10000 வீடுகளையும் அமைக்கும் திட்டத்திற்கு பணிகளைத் தயார் செய்யுமாறும் அதுதொடர்பான மேலதிக உதவிகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஏற்கனவே 10000 வீடுகளை அமைப்பதற்காக திட்டமிடல் திணைக்களத்தினதும் முகாமைத்துவ குழுவினதும் அனுமதி கிடைத்துள்ள அதேவேளை இதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதனைத்தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் அமைச்சு புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
Post a Comment