Ads (728x90)

பிபா யு 17 உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் முதன் முறையாக நடைபெற்று வரும் பிபா யு 17 உலகக் கோப்பை கால்பந்து தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 24 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் யு 17 உலகக் கோப்பை தொடரில் இதுவரை பட்டம் வென்றது இல்லை. இதனால் இன்று பட்டம் வெல்லும் அணி யு 17 உலகக் கோப்பை தொடரில் புதிதாக பட்டம் வெல்லும் அணி என்ற அந்தஸ்தை பெறும்.

இந்தத் தொடரானது இரட்டை சாதனையை படைக்க உள்ளது. போட்டிகளை நேரில் கண்டு களித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் அதிக கோல்கள் அடிக்கப்பட்டுள்ள தொடர் என இரு சாதனைகளை எட்டிப்பிடிக்க உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. போட்டி நடைபெறும் கொல்கத்தா சால்ட் லேக் மைதானம் 66 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது.

இறுதிப் போட்டியில் மோத உள்ள இரு அணிகளும் இந்தத் தொடரில் கோல் மழை பொழிந்துள்ளன. இங்கிலாந்து அணி 18 கோல்களும், ஸ்பெயின் அணி 15 கோல்களும் அடித்துள்ளன. உலகக் கோப்பை தொடரில் 4-வது முறையாக களறமிறங்கி உள்ள இங்கிலாந்து அணி முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. அதே வேளையில் ஸ்பெயின் அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியை சந்திக்கிறது. அந்த அணி 1991, 2003 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி கண்டிருந்தது.

3 முறை வாய்ப்பை நழுவ விட்ட நிலையில் தற்போது முதன்முறையாக பட்டத்தை வெல்லும் கனவுடன் உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற யு 17 யுரோ சாம்பியன் தொடரில் ஸ்பெயின் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்த தோல்விக்கு இங்கிலாந்து அணி இம்முறை பதிலடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் இங்கிலாந்து யு 20 அணி உலகக் கோப்பையை வென்றது. மேலும் யு 19 இங்கிலாந்து அணி யுரோ சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தற்போது யு 17 அணி உலகக் கோப்பையை குறிவைத்துள்ளது.

இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்கடிக்கப்படாமல் இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளது. தொடரை வெல்லும் அணியாக கருதப்பட்ட 3 முறை சாம்பியனான பிரேசிலை அரை இறுதியில் இங்கிலாந்து அணி 3-1 என பந்தாடியது. முன்னதாக கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது.

இங்கிலாந்து அணிக்கு ஸ்டிரைக்கர் புருஸ்டரும், ஸ்பெயின் அணிக்கு கேப்டன் அபேல் ருயிஸூம் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் அசாத்தியமான திறனால் தனிப்பட்ட வீரராக தங்களது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்துள்ளனர். கால் இறுதியில் அமெரிக்காவுக்கு எதிராகவும், அரை இறுதியில் பிரேசில் அணிக்கு எதிராகவும் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியிருந்தார் புருஸ்டர். இந்தத் தொடரில் அவர் இதுவரை 7 கோல்கள் அடித்துள்ளார்.

அதேவேளையில் அபேல் ருயிஸ் மாலி அணிக்கு எதிரான அரை இறுதியில் இரு கோல்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவர் இந்தத் தொடரில் இதுவரை 6 கோல்கள் அடித்துள்ளார். இவர்கள் இருவரிடையே கோல்படன் பூட் விருதை பெறுவதில் கடும் போட்டி நிலவக்கூடும். இங்கிலாந்து அணி 4-2- 3-1 என்ற பார்மட்டில் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கால் இறுதி மற்றும் அரை இறுதியில் இங்கிலாந்து அணியை போன்றே ஸ்பெயின் அணியும் 4-2- 3-1 என்ற பார்மட்டுக்கு மாறியது. இது வெற்றிகரமாக அமைந்ததால் இந்த பார்மட்டையே ஸ்பெயின் அணி கடைபிடிக்கக்கூடும். முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேசில் - மாலி மோதுகின்றன

Post a Comment

Recent News

Recent Posts Widget