அமெரிக்கா எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐ.நா. சபை எச்சரிக்கையை மீறி அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கொரிய தீபகற்பத்தில் தென்கொரிய கடற்படையும் அமெரிக்க கடற்படையும் இணைந்து தீவிர போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் அணு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளன. மேலும் அமெரிக்காவின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களும் கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டு அரசு ஊடகமான கேசிஎன்ஏ நேற்று வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவும் அதன் ஊதுகுழலான தென்கொரியாவும் போர் தீயை பற்ற வைக்கும் வகையில் செயல்படுகின்றன. அமெரிக்கா எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்துவோம். தற்போதைய நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, வடகொரியா இடையே எந்நேரமும் அணு ஆயுத போர் வெடிக்கலாம் என்று வடகொரியாவுக்கான ஐ.நா. தூதர் கிம் இன்-ரியாங் அண்மையில் எச்சரிக்கை விடுத்தது நினைவுகூரத்தக்கது.
Post a Comment