Ads (728x90)

மகாத்மா காந்தியின் படுகொலை குறித்து மறு விசாரணை நடத்த அவரது பேரன் துஷார் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி படுகொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரும் வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காந்தியின் பேரன் துஷார் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி இந்த வழக்கில் குறுக்கிட விரும்புவதாக தெரிவித்தார்.

அப்போது அவர் கூறும்போது, “காந்தி படுகொலை சம்பவம் நடந்து சுமார் 70 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதுபற்றி மீண்டும் விசாரணை நடத்தக் கூடாது. இது குற்ற சட்டத்தின் அடிப்படை அம்சம்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் தலையிட உங்களுக்கு (துஷார் காந்தி) என்ன உரிமை இருக்கிறது” என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அமரேந்திர ஷரன் கூறும்போது, “தேசிய ஆவண காப்பகத்திலிருந்து சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. எனினும் அனைத்து ஆவணங்களும் கிடைக்கவில்லை” என்றார். இதையடுத்து இந்த வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தேசத் தந்தை மகாத்மா காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ‘அபினவ் பாரத்’ அமைப்பின் அறங்காவலர் டாக்டர் பங்கஜ் குமுத்சந்த் பத்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “காந்தி சுடப்பட்டபோது அவரை நோக்கி 4 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. கோட்சே சுட்டது 3 குண்டுகள்தான். 4-வது குண்டு எங்கிருந்து வந்தது என்பது குறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை. அந்த குண்டுதான் காந்தி உயிரிழக்க காரணமாக அமைந்தது. இதில் வெளிநாட்டு சதி அடங்கியுள்ளது. இதுகுறித்து மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget