
எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. அதுபோலவே கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி பயங்கரவாதிகள் ஊடுருவலில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே பதற்றத்தை குறைக்கும் பொருட்டு இருநாட்டு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
டிஜிஎம்ஓ எனப்படும் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. பட் மற்றும் பாகிஸ்தான் டிஜிஎம்ஓ ஷாகிர் ஷம்ஷாத் ஆகிய இருவரும் ஆன்லைனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலளித்த லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.பட் '' பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாத செயல்களுக்கு துணை போவதை ஏற்க முடியாது. தீவிரவாதிகள் ஊடுருவலும், அதற்காக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதுமே பிரச்சினைகளுக்கு காரணம். எல்லையில் அத்துமீறல் தொடர்ந்தால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும்'' எனக் கூறினார்
Post a Comment