
கேரளாவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களைச் செங்கல்லாக உபயோகித்து வீடு ஒன்றை அமைத்துள்ளனர்.
கேரள மாநிலம், கழக்குட்டத்தில் உள்ள கல்லூரி புனித தாமஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம். இங்கு கட்டிடவியல் கடைசி ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் இணைந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் உதவியுடன் வீடு ஒன்றை அமைத்துள்ளனர். இந்த வீடு, 10 சதுர அடி அறுங்கோண வடிவில் 2.4 மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய துறைத் தலைவரும், கல்லூரி முதல்வருமான உஷா தாமஸ், ''பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றுவதிலும், குறைந்த விலை கொண்ட வீடுகளை உருவாக்குவதற்கும் நம்மிடையே ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன். இவ்விரண்டு புள்ளிகளையும் ஒற்றைக் கோட்டில் இணைக்கலாம் என்று தோன்றியது. அதன் விடைதான் எங்கள் மாணவர்களின் இந்த செயல் திட்டம்.
இந்த வீட்டில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வைக்கப்பட்டு இடைவெளிகளுக்கு மண் நிரப்பப்படுகிறது. இதற்காக சிமென்ட் கான்க்ரீட் பயன்படுத்தப்படுகிறது. பாட்டில்களுக்கு இருக்கும் நெளிவுகளால் அவற்றுக்கிடையேயான வலிமை அதிகமாகிறது.
பனவோலை மற்றும் வைக்கோலைக் கொண்டு மேற்கூரை வேயப்பட்டுள்ளது. பிவிசி பைப்புகளை முக்கோண வடிவங்களில் வைத்து ஜன்னல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இது 'குப்பி வீடு' (bottle house) என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 6 வருடங்களுக்கு இந்த வகை வீடுகளில் நல்ல வலிமை இருக்கும். இந்த வீடு விளிம்புநிலையில் உள்ள ஏராளமான மக்களின் வாழ்வுநிலையை மாற்றியமைக்க உதவும்'' என்றார்.
Post a Comment