அரசியல் லாபத்திற்காக, ராமர் பெயரை பயன்படுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சியினரை கடவுள் ராமர் தண்டிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.தீபாவளி பண்டிகையையொட்டி, லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் அரசியல் லாபத்திற்காக கடவுள் ராமரின் பெயரை தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகின்றனர். கடவுளின் பெயரால் அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கடவுளின் பெயரில் அங்கு அரசியல் நாடகமே நிகழ்த்தி வருகிறார். இதுதவிர, கட்சியின் மற்ற தலைவர்களும் ராமரின் பெயரை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்கள் சார்ந்த இறை நம்பிக்கைகளை மேற்கொள்ள சுதந்திரம் உள்ளது. பா.ஜ.வினர் மக்களின் இறை நம்பிக்கைகளில் தலையிட்டு மக்களை பெரும்பாதிப்பிற்குள்ளாக்கி வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு, பாமர மக்களை வஞ்சிக்கும் செயலிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் உள்ளிட்ட விவகாரங்களில் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் மனதில் நிறைந்துள்ள ராமரை, பா.ஜ. கட்சியினர் தொடர்ந்து அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருவதால், கடவுள் ராமர் அவர்களை நிச்சயம் தண்டிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment