Ads (728x90)

கெற்றலோனியா, குர்திஸ்தான், ஸ்கொட்லாந்து போன்று தமிழ் மக்களும் பொது வாக்கெடுப்பொன்றை நடத்தி பிரிந்துசெல்லும் நிலையை இந்த அரசு விருப்புகின்றதா எனக் கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இனப்பிரச்சினைக்கு இதய சுத்தியுடன் தீர்வொன்றைக் காண்பதற்கான அக்கறை அரசிடம் இல்லையெனவும் குற்றஞ்சாட்டினார். 

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலத்திரனியல் திருத்தச் சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த சிறிதரன் மேலும் கூறுகையில்;

இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டமை குறித்து பல்வேறு தொழில்நுட்ப ரீதியிலான சாட்சியங்கள் உள்ளன. தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தமை  மற்றும் பாலச்சந்திரன் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தமை போன்ற தொழில்நுட்ப ஆதாரங்கள்  காணப்படுகின்றன. 

அதேபோல் முல்லைத்தீவில் மக்களின் கொட்டில்களில் பொஸ்பரசு இராசாயனக் குண்டுகள் வீசப்பட்டிருந்தமை குறித்த தொழில்நுட்ப ஆதாரங்கள் சர்வதேச ரீதியில் காணப்படுகின்றன. இவற்றின் அடிப்படையின் ஏன் ஓர் இதய சுத்தியுடன் தீர்வுக்கு வர முடியாதுள்ளது? 

ஈராக்கில் இருந்து குர்திஸ்தான் பிரிந்து சென்றது போன்றும், இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் ஸ்பெயினில் இருந்து கெற்றலோனியா பிரிந்து செல்ல பொது வாக்கொடுப்பொன்றை நடத்தியது போன்றும் தமிழர்களும் பொது வாக்கெடுப்பொன்றை நடத்தி இலங்கையில் இருந்து பிரிந்து செல்லும் நிலைக்கு அரசால் தள்ளப்படுகின்றனரா?

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் சிறையில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள் அல்ல, பயங்கரவாதிகள். அவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று கூறுகின்றனர்.  ஒஸ்லோ, ஜப்பான்,  தாய்வானில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுகளின் போது இவர்கள் பயங்கரவாதிகளாகத் தென்படவில்லையா? 

தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள சிலர், இவ்வாறான கருத்துகளை முன்வைப்பதால் இந்த நாடு சரியான பாதையில் எவ்வாறு பயணிக்கும்? புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு இதய சுத்தியுடன் தீர்வைக் காண முன்வராவிடின், பாரதூரமான விளைவுகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget