Ads (728x90)

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வாரிய தலைவர் லெவன் அணியுடன் இன்று மும்பையில் மோதுகிறது.

வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக நியூஸிலாந்து அணி இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் வாரிய தலைவர் லெவன் அணியுடன் நியூஸிலாந்து மோதுகிறது.

கடந்த சில நாட்களாகவே மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப்பில் நியூஸிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சீனியர் பேட்ஸ்மேன்களான வில்லியம்சன், ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்தில் உள்ளிட்டேர் இந்த பயிற்சி ஆட்டத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். ஏனெனில் இதில் அதிக ரன்கள் குவிக்கும் பட்சத்தில் அது ஒருநாள் போட்டித் தொடரை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவியாக இருக்கக்கூடும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான வாரிய தலைவர் லெவன் அணி இளம் வீரர்களை உள்ளடக்கியதாக உள்ளது. சமீபத்தில் முடிவடைந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். கருண் நாயர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், பிரித்வி ஷா ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். கடைசி நேரத்தில் கே.எல்.ராகுலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை தொடரில் மோசமாக விளையாடிய கே.எல்.ராகுலுக்கு ஆஸ்திரேலிய தொடரில் விளையாடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ராகுல் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மீண்டும் தேசிய அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் தொடக்க ஜோடியான டாம் லதாம், மார்ட்டின் கப்தில் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுக்க வேண்டுமென்பது பயிற்சியாளர் மைக் ஹெசனின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. வாரிய தலைவர் அணியில் அனுபவம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லை. தவல் குல்கர்னி, ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் சர்வதேச அளவிலான போட்டிகளில் குறைந்த அனுபவமே உள்ளது. இதனால் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் சவால் அளிக்கக்கூடும்.

அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர்களான ஷாஹாஸ் நதீம், கரண் சர்மா ஆகியோர் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரக்கூடும். நியூஸிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சான்டர் மிரட்ட தயாராக உள்ளார். காலின் முன்ரோ, ஹென்றி நிக்கோல்ஸ், ஜார்ஜ் வோர்க்கர் ஆகியோர் இந்தியா ஏ அணிக்கு எதிரான தொடரில் விளையாடி உள்ளனர். இவர்கள் அளிக்கும் உள்ளீடுகளும் அணிக்கு பயனுள்ளதாக அமையக்கூடும்.

இதற்கிடையே பயிற்சி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக மும்பையில் பரவலாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அணிகள் விவரம்

நியூஸிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), டோட் அஸ்லே, டிரென்ட் போல்ட், டி கிராண்ட் ஹோம், மார்ட்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லதாம், நிக்கோல்ஸ், ஆடம் மில்னே, காலின் முன்ரோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்டர், டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், ஜார்ஜ் வோர்க்கர்.

வாரிய தலைவர் லெவன்: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), கே.எல்.ராகுல் பிரித்வி ஷா, ஷிவம் சவுத்ரி, கருண் நாயர், குர்கீரத் மான், மிலிந்த் குமார், ரிஷப் பந்த், நதீம், கரண் சர்மா, தவல் குல்கர்னி, ஜெயதேவ் உனத்கட், அவேஷ் கான்

Post a Comment

Recent News

Recent Posts Widget