மியான்மரில் ரோஹிங்கியா கலவரம் ஏற்பட்ட ராக்கைன் மாவட்டத்தை இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சி பார்வையிட்டுள்ளார்.இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி இன்று (வியாழக்கிழமை) காலை , கலவரம் ஏற்பட்ட ராக்கைன் மாவட்டத்தின் வடக்குப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.
மேலும் ராக்கைன் மாவட்டத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களையும் மியான்மர் அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு சூச்சி தனது பயணத்தை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்காமல் இருந்ததற்காக ஆங் சான் சூச்சிக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் பதிவாகின.
இதனையடுத்து சூச்சி, மியான்மரில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைச் சமாளிக்க தனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும். ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வன்முறையால் பாதிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கலவரம் ஏற்பட்ட ராக்கைன் மாவட்டத்தை சூச்சி பார்வையிட்டுள்ளார்
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பவுத்தர்களுக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றனர்.
இதுவரை மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
Post a Comment