Ads (728x90)

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடித்துள்ள 'டிக் டிக் டிக்' படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வைகளை யு டியுபில் பெற்றுள்ளது.

இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் ஆங்கிலப் படங்களின் காதலர் போலிருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை வராத 'விண்வெளிப் படம்' ஒன்றை பிரமாதமாக உருவாக்கியிருக்கிறார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக நேற்று வெளியான டிரைலர் அமைந்துள்ளது.


சக்தி சௌந்தர்ராஜன் இதற்கு முன் ஜெயம் ரவி நாயகனாக நடித்த 'மிருதன்' படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் தமிழில் வெளிவந்த முதல் 'ஜாம்பி' படமாக அமைந்தது. அதற்கு முன் அவர் இயக்கிய 'நாய்கள் ஜாக்கிரதை' படமும் வெற்றிப் படம் தான். அவர் இயக்குனராக அறிமுகமான 'நாணயம்' படமும் ஒரு வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். அந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் மட்டும் நடித்திருந்தால் மிகப் பெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.

'டிக் டிக் டிக்' டிரைலரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், கிராபிக்ஸும் உண்மையிலேயே 'ஹாலிவுட் ஸ்பேஸ்' படம் ஒன்றைப் பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கப் போகிறது என்பது தெரிகிறது.

விண்வெளியில் இருந்து பூமியில் விழும் ஒரு விண்கல்லால் ஏற்படும் விபரீதம், அடுத்து விழப் போகும் மிகப் பெரும் விண்கல் ஆபத்தை எப்படி தடுக்கப் போகிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்பதை டிரைலரைப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

'டிக் டிக் டிக்' படமாக வரும் போதும் நிறைவாக இருந்தால் தமிழில் குறிப்பிடப்படும் படமாக அமைய வாய்ப்புகள் உண்டு.

Post a Comment

Recent News

Recent Posts Widget