புதிய அரசமைப்புக்கு ஆதர வளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் நேரில் பகிரங்கக் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் மகிந்த அணியினர் புதிய அரசமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தெரிவித்தார் சபை முதல்வரும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல.‘‘தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இதுவே இறுதிச் சந்தர்ப்பம். பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவு இருக்கும்போதே இதற்குத் தீர்வுகாணவேண் டும். மகிந்த அணியினர் புதிய அரசமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்’’ என்று அவர் நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தினார்.
வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
கூட்டு அரசே எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு கோப் குழுத் தலைவர் பதவியை வழங்கியிருந்தது. முன்னைய ஆட்சிகளின்போது அரசை பிரதிநிதித்துவம் செய்பவர்களே கோப் குழுவின் தலைவர்களாக இருந்தனர்.
மகிந்த ராஜபக்ச, அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்கள் அனைத்தையும் தன் வசப்படுத்திக்கொண்டார். கூட்டு அரசின் ஊடாக நாடாளுமன்றத்தைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்புக் குழுக்களை நியமித்தோம். எதிர்க் கட்சியினரை அதிலும் நியமித்துள்ளோம்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை ஒழிப்பதற்கு மக்கள் ஆணையில்லை என்று எவரும் கூறமுடியாது. ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் மேடைகளில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகவே கூறியது.
அதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். மனித உரிமை தொடர்பில் பன்னாட்டு ரீதியில் நாம் அடிமைப்பட்டு இருந்தோம். கூட்டு அரசு ஆட்சிக்கு வந்தபோது மீண்டும் பன்னாட்டு ஆதரவைப் பெற்றுள்ளோம். பன்னாட்டு ஆதரவு இருக்கும்போதே தேசிய பிரச்சினையைத் தீர்க்கவேண்டும்.
போர் நிறைவடைந்த பின்னர் மகிந்தவே அதிகாரப் பகிர்வு குறித்து முதலில் பேசினார். இந்தியாவுக்குச் சென்று உறுதியும் அளித்தார். அதற்குத் தெரிவுக் குழுவையும் நியமித்தார். அப்போது தமிழ்த் தலைவர்கள் அவருக்கு ஆதரவு வழங்கவில்லை.
மகிந்தவே முதலில் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரம் குறைவு எனக் கூறியிருந்தார். எனவே, மகிந்த அணியினர் புதிய அரசமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – என்றார்.
Post a Comment