உள்ளூராட்சி சபைகளுக்கானத் தேர்தல் மேலும் காலதாமதமாவதற்கு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் நேற்றுக் கடும் எதிர்ப்பு வெளியிட்டார். இதனால் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறை செய்து, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின்போது முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இதை அடிப்படையாகக்கொண்டு ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார்.
‘‘உள்ளூராட்சி சபைத் தேர்தலை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றோம்’’ என்றார் மகிந்த.
இதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல, ‘‘தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு நாமும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம். தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது’’ – என்றார்.
‘‘உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் ஏற்கனவே இரண்டரை வருடங்களாக நடத்தப்படாமல் இருப்பதுடன், தற்போது அது 3 வருடங்களாகப் போகின்றது. இந்த விடயத்தால் நாட்டில் பெரும் பதற்றமொன்று ஏற்பட்டுள்ளது. இது சிறு தேர்தலொன்றே. அதை அரசுதான் காலம் தாழ்த்தியுள்ளது. இதற்கான முழுப் பொறுப்பும் அரசையே சாரும்’’ என்றும் மகிந்த கூறினார்.
அமைச்சர்களின் செயலர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் இந்த வழக்குகளை முன்வைத்திருந்தனர் என்பது மிகத் தெளிவாக இருக்கின்றது. தேர்தலை காலம் தாழ்த்த அரசு எடுத்துள்ள முயற்சிகளின் விளைவாகவே இவை அனைத்தும் இடம்பெறுவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
‘‘தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படவேண்டும் என்பதே எங்களது தேவையாக இருக்கின்றது. இந்த விடயத்தில் நீதிமன்றத்தைத் தவறாக பயன்படுத்துவதை நாங்கள் எதிர்கின்றோம்’’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, 2015ஆம் ஆண்டு இந்த அரசை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு செயற்பட்ட அனைவரும் தற்போதைய இந்த நிலைமைக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், இந்த விடயத்தை தற்போது விவாதப் பொருளாக்கிக் கொள்ளமுடியாது என்று அந்தச் சந்தர்ப்பத்தில் சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
Post a Comment