
கூட்டு அரசில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பதவிகளை உதறித்தள்ளி அரசைவிட்டு வெளியேறவேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனையே இந்த இழுபறிநிலைக்கு முக்கிய காரணமெனக் கூறப்படு கின்றது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு முன்னர் மைத்திரி அணியையும், மகிந்த அணியையும் ஒன்றிணைப்பதற்காக இரு தரப்புகளிலிருந்தும் மூவரடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த இரு குழுக்களும் கடந்த சனிக்கிழமை இரவு கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தின. இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இரண்டாம்கட்டச் சந்திப்பு 28ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில் நேற்று இரு தரப்பினரும் பேச்சு நடத்தினர்.
மகிந்த அணியால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைப் பட்டியல் சம்பந்தமாகவும், மைத்திரி தரப்பால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்தும் அங்கு விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கூட்டு அரசில் வகிக்கும் அமைச்சுப் பதவிகளைத் துறந்துவிட்டு வந்தால் மாத்திரமே இணைப்பு சாத்தியமாகும் என்று மகிந்த அணியின் பேச்சுக்குழு தெரிவித்தது. தமது அணியின் நாடாளுமன்றக்குழு இது விடயத்தில் உறுதியாகவே இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியது.
தமது நேர்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் வைக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு உடனடியாக சம்மதம் தெரிவிப்பதற்கு மைத்திரி தரப்பின் பேச்சுக்குழு மறுத்துவிட்டது. தமது கோரிக்கைகளுக்குப் பச்சைக்கொடி காட்டினால் மாத்திரமே இணைவு சாத்தியமாகும் என மகிந்த அணி திட்டவட்டமாகக் கூறிவருகின்றது.
இருவாரங்களுக்குப் பின்னரே இரு தரப்புகளுக்கும் இடையே அடுத்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment