இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 100 சதவீதம் உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தும்படி கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயை இந்த மாதத்தின் தொடக்கத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அப்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
பல மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்தும் அதேவேளையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பளம் பெறும் விகிதம் குறித்தும் ஒப்பிட்டு விவாதம் நடைபெற்றது. இதன்முடிவில் பிசிசிஐ நிர்வாகக்குழு, வீரர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்பதை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்களின் சம்பளம் அடுத்த சீசன் முதல் 100 சதவீதம் உயரக்கூடும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச கிரிக்கெட், உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் என ஒட்டுமொத்தமாக பிசிசிஐ ஒரு சீசனுக்கு ரூ.180 கோடியை தற்போது சம்பளமாக வழங்கி வருகிறது. இந்த தொகையில் ரூ.200 கோடி கூடுதலாக சேர்க்கப்படக்கூடும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் கோலி, பிசிசிஐ-யிடம் வருமானமாக ரூ.5.5 கோடியை பெற்றுள்ளார். இனிமேல் இது ரூ.10 கோடியாக உயரக்கூடும். இதேபோல் ரஞ்சி கோப்பையில் விளையாடும் வீரர்களின் சம்பளம் ஒரு சீசனுக்கு ரூ.20 முதல் 30 லட்சம் வரை உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடும் வீரர்கள் ஒரு சீசனுக்கு ரூ.12 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஊதியமாக பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சம்பள உயர்வு தொடர்பாக வெளியான தகவலை பிசிசிஐ செயலாளர் (பொறுப்பு) சி.கே.கண்ணா மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “வீரர்களின் சம்பள உயர்வு என்பது இன்னும் ஆலோசனையில் தான் உள்ளது. எதுவும் முடிவு செய்யப்படவில்லை. ஊதிய உயர்வு தொடர்பாக மற்றுமொரு ஆலோசனை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலையில் ஊதிய உயர்வு தொடர்பான வரைவு பட்டியலை பொருளாளர் அனிருத் சவுத்ரி ஆய்வு செய்து வருகிறார். இது பிசிசிஐ-யின் நிதிக்குழு மற்றும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்றார்.
தற்போதைய ஒப்பந்தத்தின்படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஏ கிரேடு வீரர்களுக்கு ரூ.2 கோடியும், பி கிரேடு வீரர்களுக்கு ரூ.1 கோடியும், சி கிரேடு வீரர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment