Ads (728x90)

பகலிரவு டெஸ்ட் போட்டி தவிர்க்க முடியாதது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்களை மைதானத்துக்கு நேரில் வந்து பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. டி 20 ஆட்டங்களின் தாக்கம் மற்றும் வலுவில்லாத எதிரணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளால் சமீபகாலமாக மைதானங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு ரசிகர்களை மைதானத்துக்கு வரவழைக்கும் விதமாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தி வருகின்றன. ஆனால் பிசிசிஐ இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் பகலிரவு டெஸ்ட் போட்டி தவிர்க்க முடியாதது என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

பகலிரவு டெஸ்ட் போட்டி தவிர்க்க முடியாதது, இது என்றாவது ஒருநாள் நடக்க வேண்டும். இந்த போட்டியில் சிவப்பு பந்துக்கு பதிலாக பிங்க் பந்து பயன்படுத்தப்பட வேண்டும். இது எளிதானது தான். இதன் மூலம் மாலை நேரங்களில் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து போட்டியை ரசிப்பார்கள். இலங்கை அணிக்காக வருந்துகிறேன். அந்த அணியை முன்பு சேவக், சச்சின் துவம்சம் செய்தார்கள். தற்போது அந்த பணியை விராட் கோலி, ரோஹித் சர்மா செய்கின்றனர்.

3-வது முறையாக இரட்டை சதம் விளாசிய ரோஹித் சர்மாவின் இன்னிங்ஸ் மிகவும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது 100 ரன்களை அவர் வெறும் 36 பந்துகளில் கடந்துள்ளார். இலங்கை பந்து வீச்சாளர்களை பார்த்தபோது அவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என எண்ணத் தோன்றியது. ரோஹித் சர்மா ஒரு தீவிரமான வீரர். இந்த ஆண்டில் அவரது ஒருநாள் போட்டி சாதனைகள் டேவிட் வார்னர், விராட் கோலி ஆகியோருடன் ஒப்பிடும் போது சிறப்பாக உள்ளது. இதே வழியில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன்.

Post a Comment

Recent News

Recent Posts Widget