
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அவருக்கு பதிலாக வேறொருவரை முதலமைச்சராக்கும் திட்டம் கட்சிக்குள் நிலவுகிறதா என்ற கேள்வி பொதுமக்களால் எழுப்பப்பட்டுள்ளது.
வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், கட்சித் தலைமைப்பீடத்திற்கும் இடையே அண்மைக்காலமாக முரண்பட்ட கருத்து இருந்து வரும் நிலையில் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனுக்கு பதிலாக வேறொருவரே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கட்சித் தலைமைப்பீடம் அண்மைக்காலமாக கூறி வருகின்றது.
இந் நிலையில் நேற்று முன்தினம் வட மாகாண சபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான எஸ். சுகிர்தன் தனது உரையில்,
"இன்று முதலமைச்சர் அரசியலில் எங்கோ வளர்ந்து சென்றுவிட்டார். எமது மக்களுக்காக அவர் இனிவரும் காலத்தில் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அடுத்த மாகாண சபைக்கு நல்லதொருவர் முதலமைச்சராக வர வேண்டும்." என்று கூறியிருந்தார்.
சுகிர்தனின் இந்த உரை மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் இந்த மாகாண சபையின் ஆயுட் காலம் முடிவடைவதற்கு முன்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பதிலாக வேறொருவரை முதலமைச்சராக்கிவிட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரனை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லும் எண்ணம் கட்சித் தலைமைப் பீடத்திற்கு ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவரது சேவையை வட பகுதி முழுவதற்கும் செய்வதையே தாங்கள் விரும்புவதாகவும் தற்போதைய நிலையில் கிழக்கிற்கு ஏற்பட்ட நிலைமை வடக்கிற்கு ஏற்படாது ஒரளவாவது பெரும் தடுப்பு அரணாக விக்னேஸ்வரனே இருப்பதாகவும் அவரே தொடர்ந்தும் வட மாகாண சபைக்கு முதலமைச்சராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ள பொதுமக்கள் பாராளுமன்றம் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று தேசியத்தை இழந்து ஐக்கிய தேசியத்துடன் ஒன்றிணைந்த நிலையில் முதலமைச்சருக்கும் அந்த நிலைமை ஏற்பட்டு விட கூடாது அவர் தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேணடும் என்றே தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்
Post a Comment