சிம்ம ராசி அன்பர்களே!
மனதில் துணிவும், செயலில் உறுதியும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
சனிபகவான் 4-ம் இடத்தில் இருந்து பிரச்னைகளை தந்திருப்பார். தாயின் உடல்நலக்குறைவால் சிரமப்பட்டிருப்பீர்கள். இந்த நிலையில் சனிபகவான் 5-ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் பிரச்னை உருவானாலும், முற்பிறவியில் செய்த புண்ணிய பலன் கைகொடுக்கும்.
சனி திருப்தியற்ற நிலையில் இருந்தாலும், அவரது 7-ம் இடத்து பார்வையும் சிறப்பாக உள்ளது. தடைகள் விலகி ஓரளவு நன்மை உண்டாகும்.
குருபகவான் 3-ம் இடத்தில் இருக்கிறார். முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. அவரது 5,7,9ம் இடத்து பார்வைகள் சாதகமாக உள்ளன. குருவின் பார்வையால் கோடி நன்மை காண்பீர்கள். குரு 2018 பிப். 14-ல் 4-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறியபின், மன உளைச்சல், உறவினர் வகையில் வீண் பகை உருவாக்குவார். நிழல் கிரகமான ராகு தற்போது 12-ம் இடமான கடகத்தில் இருக்கிறார். இங்கு அவர் பொருள் விரயம், தூரதேச பயணம் ஏற்படும். கேது தற்போது 6-ம் இடமான மகரத்தில் இருக்கிறார். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். செயலில் வெற்றி உண்டாகும்.
2018 ஜனவரி – 2019 பிப்ரவரி தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். யாரையும் நம்பி பொறுப்பு, பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசின் வகையில் சலுகை எதிர்பார்க்க முடியாது. பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி பெறும்.
பணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை.
கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலருக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காணலாம்.
மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது அவசியம்.
விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும்.
பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஆடம்பர பொருட்களை வாங்க வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும்.
2018 ஏப். 9- முதல் 2018 செப். 3- வரை குரு வக்கிரம் அடைந்து துலாம் ராசியில் இருப்பதால் முயற்சியில் தடை உருவாகலாம். இருந்தாலும் சனிபகவானின் 7-ம் இடத்துப் பார்வையால் நன்மை பெறுவீர்கள்.
2019 மார்ச் – 2020 மார்ச் ராகு, கடக ராசியில் இருந்து மிதுனத்திற்கு மாறுகிறார். சேமிக்கும் விதத்தில் பொருளாதாரம் சிறக்கும். பெண்களால் ஆடை, ஆபரணம் சேரும். ஆனால் கேது, மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுவது சிறப்பான இடம் அல்ல. அவ்வப்போது அரசு வகையில் பிரச்னை உருவாகலாம்.
பூர்வ புண்ணியமான 5ம் இடம் பலமாக இருப்பதால், முயற்சியில் இருந்த தடை அனைத்தும் விலகும். முயற்சி வெற்றிகரமாக முடியும். பணப்புழக்கத்துக்கு குறைவிருக்காது. கணவன், -மனைவி இடையே அன்பு பெருகும்.
உறவினர் வகைகளில் இணக்கம் உண்டாகும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
தொழில், வியாபாரம் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிரிகள் தொல்லை குறுக்கிட்டாலும் அதை வெற்றிகரமாக சமாளித்து விடுவீர்கள். இரும்பு, அச்சு தொடர்பான தொழில், தரகு, பழைய பொருள் வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும். ஆனால் அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைப்பது அரிது.
பணியாளர்களுக்கு மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலர் திடீர் பணி, இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். சிலருக்கு முக்கிய பொறுப்பு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. குருபகவானின் வக்ரகாலத்தில் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.
கலைஞர்கள் ஆடம்பர வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கையெ ழுத்தாகும்.
அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். விரும்பிய பதவி விரைவில் கிடைக்கும். மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். சிலர் மேல்படிப்பிற்காக வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பும் கிடைக்கும்.
விவசாயிகள் நல்ல வளத்தை காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அமோக விளைச்சல் பெறுவர். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.
பெண்கள் குடும்ப வாழ்வில் குதூகல மான பலனைக் காண்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். ஆனால் குருபகவான் 2019 மே 19- முதல் 2019 அக். 27- வரை வக்ரம் அடைந்து விருச்சிக ராசியில் இருக்கிறார். அவரால் நன்மை தர இயலாது.
2020 ஏப்ரல் – டிசம்பர் ராகு ராசிக்கு 11-ம் இடத்தில் இருந்து நன்மையை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், 2020 ஆக. 31-ல் ராகு இடம் பெயர்ச்சி அடைந்தபின், அவரால் நன்மை தர இயலாது. அவர் 10-ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலை தான். சிலர் வீண் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறு வந்திருக்கும். கேது இதுவரை 5-ம் இடத்தில் இருந்து உடல் உபாதை தந்திருக்கலாம். இப்போது அவர் 4-ம் இடத்திற்கு வந்திருக்கிறார். 5-ல் கேது இருக்கும் போது தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதிபடலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். ஜூலை 7க்குப் பின் குருபகவானின் வக்ர காலத்தில் தடைபட்ட திருமணம் கைகூடும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் முக்கிய பொறுப்பை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். புதிய தொழில் முயற்சியில் தற்போது ஈடுபட வேண்டாம். சிலருக்கு வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்காது.
பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்க வேண்டியதிருக்கும். வேலையில் பொறுமை தேவை. குருபகவானின் வக்ரகாலத்தில் விரும்பிய இட, பணிமாற்றம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கலைஞர்கள் மறைமுகப் போட்டியை சந்திக்க நேரிடும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். குரு வக்ரகாலத்தில் படிப்பில் சிறந்து விளங்குவர்.
விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் தானியங்களை பயிர் செய்ய வேண்டாம். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்க்கவும். குரு வக்ரகாலத்தில் பிறந்த வீட்டில் இருந்து வெகுமதி வரப் பெறுவர்.
பரிகாரப்பாடல்
எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கனும் வெற்றி
வேண்டினேன் எனக்கு அருளினள் காளி
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
சாகு மானுட மாயினும் அஃதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி
பாரில் வெற்றி எனக்குறு மாறே.
பரிகாரம்:
● வெள்ளி ராகு காலத்தில் காளிக்கு நெய்விளக்கு
● சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அபிஷேகம்.
Post a Comment