இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இலங்கை அணி பேட் செய்தது. குணதிலாக 13 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில், மிட் ஆஃப் திசையில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா நிதானமாக பேட் செய்ய, உபுல்தரங்கா மட்டையை சுழற்றினார். ஹர்திக் பாண்டியா வீசிய 9-வது ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகள் விளாசிய உபுல்தரங்கா 36 பந்துகளில் அரை சதம் அடித்தார். இது அவரது 36-வது அரைசதமாக அமைந்தது. முதல் பவர்பிளேவில் 68 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 17 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது.
யுவேந்திரா சாஹல் வீசிய 19-வது ஓவரில் தரங்கா இமாலய சிக்ஸர் ஒன்றை அடித்தார். நிதானமாக பேட் செய்த சமரவிக்ரமா 57 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் யுவேந்திரா சாஹல் பந்தை, டீப் கவர் திசையில் பந்தை தூக்கி அடிக்க அது ஷிகர் தவணிடம் கேட்ச் ஆனது. 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 121 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து மேத்யூஸ் களமிறங்கினார். சாஹல் வீசிய 25 மற்றும் 27-வது ஓவர்களில் உபுல் தரங்கா தலா ஒரு சிக்ஸர் விளாசினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குல்தீப் யாதவ் வீசிய 28-வது ஓவரில் உபுல் தரங்கா, தோனியின் துல்லியமான ஸ்டெம்பிங்கால் ஆட்டமிழந்தார். அவர் 82 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய திக்வெலா 8 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து விக்கெட் சரிவால் மேத்யூஸ், குணரத்னே ஜோடி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. மேத்யூஸ் 28 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் யுவேந்திரா சாஹல் பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் திசாரா பெரேரா 6 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். இந்த விக்கெட்டையும் சாஹலே கைப்பற்றினார். ஒரு கட்டத்தில் 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்த இலங்கை அணி அடுத்த 37 ரன்களை சேர்ப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்களை இழந்து நெருக்கடியை சந்தித்தது.
7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய பதிரனாவை எளிதாக ரன் அவுட் செய்யும் வாய்ப்பை புவனேஷ்வர் குமார் தவறவிட்டார். எனினும் அவர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 7 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அகிலா தனஞ்ஜெயா 1, சுரங்கா லக்கமல் 1 ரன்களில் நடையை கட்டினர். நிதானமாக பேட்செய்த குணரத்னே 51 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்தில் வெளியேற இலங்கை அணி 44.5 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 22 ஓவர்கள் வரை இலங்கை அணியின் கையே மேலோங்கியிருந்தது. இதன் பின்னர் உபுல் தரங்கா, சமரவிக்ரமா கூட்டணி உடைப்பு மற்றும் தோனியின் அற்புதமான ஸ்டெம்பிங் ஆகியவற்றின் காரணமாக ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அந்த அணி கடைசி 8 விக்கெட்களை 55 ரன்களுக்கு தாரை வார்த்தது.
216 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷிகர் தவண் 84 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் தனது 12-வது சதத்தை அடித்தார். அவர் 100 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக ஸ்ரேயஸ் ஐயர் 63 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அவர், ஷிகர் தவணுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு அவர் 135 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவும், தொடர் நாயகனாக ஷிகர் தவணும் தேர்வானார்கள்
Post a Comment