
தமிழரசு கட்சி என்றும் விடுதலைப்புலிக ளுக்கு எதிராக செயற்படவில்லை. என்றைக்கும் விடுதலைப்புலிகளை புறக்கணிக்கவுமில்லை. இவ்வாறு தமிழரசுக் கட்சியின் இணைச் செயலரும், வடமாகாண சபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
அதில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு ஆசனம் ஏன் வழங்கவில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு பதில் அளித்தார். அவர் தெரிவித்ததாவது:
விடுதலைப் புலிகள் அமைப்பையோ, அதன் உறுப்பினர்களையோ என்றைக்கும் தமிழரசு கட்சி புறக்கணிக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் ஆசனம் கேட்டது உண்மை. அப்போதைய சூழலில் அதனை வழங்க முடியவில்லை.
இருந்த போதிலும் தேர்தலுக்குப் பின்னரான காலப் பகுதி முதல் தற்போது வரை நாம் ஜனநாயகப் போராளிகள் கட்சியுடன் நெருக்கமாகவே உள்ளோம். என்றார்.
அதன் போது, விடுதலைப் புலிகளின் உண்மையான போராளிகள் போரிட்டு வீரச்சாவடைந்தனர். ஏனையோர் “சைனட்” கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அது, குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து. தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. அதனை அவர்கள் தெரிவிக்கலாம். அது கட்சியின் கருத்தல்ல. தமிழரசு கட்சி என்றைக்கும் விடுலை புலிகளை எதிர்த்தது இல்லை – என்று சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
Post a Comment