
முதன்மை சந்தேகநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட் டுள்ளதால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய அரசியல் புள்ளிகளும் விசாரணைப் பொறிக்குள் சிக்கியி ருப்பதால் இது விடயம் தொடர்பில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர், தனது சட்ட ஆலோசகர்களுடன் பேச்சு நடத்திவிட்டே சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அறிக்கையை அரச தலைவர் மைத்திரி ஒப்படைக்கவுள்ளார்.
நீதியான விசாரணைகள் முடியும் வரை நிதித்துறையுடன் தொடர்புடைய முக்கிய அரச நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் தனது ஆலோசகர்களுடன் அரச தலைவர் நேற்று நீண்ட நேரம் மந்திராலோசனை நடத்தியுள்ளார் எனவும் அறியமுடிந்தது.
பிணைமுறி மோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் விதமாக அரச தலைவர் ஆணைக்குழு இவ்வருடம் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய பிணைமுறியுடன் தொடர்புபட்ட மத்திய வங்கியின் பிரதானிகள், முதன் நிலை நிறுவனங்கள், அமைச்சர்கள், சமூக ஆர்வலர்கள் என்று மொத்தமாக 63 பேரிடம் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியிருந்தது.
ஆரம்பத்தில் மூன்று மாதங்களுக்குள் விசாரணைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அரச தலைவர் பணிப்புரை விடுத்திருந்தபோதிலும் பிணைமுறி ஏலத்தில் பல்வேறு அரச பிரதானிகள் சம்பந்தப்பட்டுள்ளமையால் விசாரணைக் காலத்தை நீடிக்க வேண்டும் என்று ஆணைக்குழு கோரிக்கை விடுத்திருந்தது.
தொடர்ந்து நான்கு தடவைகள் காலநீடிப்பு வழங்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் சாட்சியப் பதிவுகளோடு நிறைவடைந்திருந்தது.
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை செய்வதற்காக அரச தலைவரினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்திரசிறி, பி.எஸ் ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற உதவி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னிலையாகி விசாரணைகளுக்கு தலைமை தாங்கியிருந்தனர். அத்தோடு அரச சட்டத்தரணிகள் சார்பில் மூத்த மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் அரச தலைவர் சட்டத்தரணி டப்புல டி லிவேரா தலைமைத் தாங்கியிருந்தனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன துய அரசை உருவாக்க எது செய்யவும் துணிவேன், அதிரடி நடவடிக்கைகளை எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார். தற்போது பிணை முறி மோசடி விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது.
Post a Comment