ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள கஸன் கதீட்ரல் தேவாலயம் மீது நடக்கவிருந்த பயங்கரவாதத் தாக்குதலை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ )தந்த தகவலின் உதவியால் தடுத்து நிறுத்தப்பட்டதாக, அமெரிக்கா மற்றும் ரஷிய தலைவர்கள் கூறியுள்ளனர்.டிரம்பை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின், இதற்கு நன்றி தெரிவித்ததாக வெள்ளை மாளிகை மற்றும் கிரம்ளின் வட்டாரங்கள் உறுதி செய்தன.
சனிக்கிழமையன்று இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக ரஷியா தெரிவித்தது.
தாக்குதலுக்கு முன்பே "பயங்கரவாதிகள்" பிடிபட்டதால், பலர் உயிர் தப்பியுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஏழு பேரை கைது செய்ததாக தெரிவித்த ரஷிய ஃபெடரல் பாதுகாப்பு சேவை, அவர்களிடம் இருந்து வெடி பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் தீவிரவாத இலக்கியங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் கூறியது.
குடிமக்களை கொல்வதற்கு, தேவாலயம் முன்பு தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் இரண்டாவது பெரிய நகரமான பீட்டர்ஸ்பர்கில் உள்ள தேவாலயம் மற்றும் பல பொது இடங்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்த வெடி பொருட்களை அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயிலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment