
விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு அவரது அணி பெருவாரியாக வெற்றி பெற்ற பின் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. ஆனால், பொதுழுக்குழுவை நடத்த விடாமல் விஷாலின் எதிர் அணியினர் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.
பொதுக்குழுவிற்கான பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த நீதியரசர் ராமநாதன் முன்னிலையிலேயே விஷாலை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் பின் சிலர் அணி திரண்டு ஆவேசமாக கோஷங்களை எழுப்பியுள்ளனர். அவர்கள் கலைவாணர் அரங்கத்தின் மைக்குகள், ஒயர்கள் ஆகியவற்றையும் சேதப்படுத்தினார்கள் என விஷால் தரப்பில் சொல்லப்படுகிறது.
பொதுக்குழுவில் சுமார் 25 பேர் மட்டுமே இப்படி ரகளையில் ஈடுபட்டதாகவும், வந்திருந்த 250க்கும் மேற்பட்டோர் இவையனைத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டு தொடர்ந்து பொதுக்குழு நடத்த வேண்டும் என ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.
பதவி ஏற்ற எட்டு மாதங்களில் பல விஷயங்களை செய்து முடித்துள்ள விஷால் தரப்பிலான நிர்வாகிகள், அதை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகவே பொதுக்குழுவை நடத்தவிடாமல் திட்டமிட்டபடி சதி செய்துள்ளார்கள் என்கிறார்கள்.
எதிர் தரப்பினருக்கு என்ன சந்தேகம் இருக்கிறதோ, அதை கேட்டிருந்தால் அதற்கான பதிலை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அளித்திருப்பார்கள். ஆனால், யாரையுமே பேச விடாமல், எதையுமே சொல்ல விடாமல் தடுத்தால் செய்த பல நல்ல விஷயங்களை எப்படி சொல்ல முடியும் என்கிறது விஷால் தரப்பிலான ஆதரவு தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மொத்தத்தில் பொதுக்குழு அமைதியாக நடக்கக் கூடாது என்று எதிர்தரப்பினர் அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு சதி செய்ததாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். விரைவில் விஷால் தரப்பிலிருந்து அவர்கள் செய்து முடித்துள்ள திட்டங்களைப் பற்றியும், செய்ய உள்ள திட்டங்களைப் பற்றியும், அதை செய்ய விடாமல் யார் தடுக்கிறார்கள் என்பதைப் பற்றியும் விரிவான அறிக்கை ஒன்று வர வாய்ப்புள்ளது.
Post a Comment