
கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மன்னார் நகர சபை ரெலோவுக்கு ஒதுக்கப்பட்டது. அது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
இதனையடுத்து மன்னார் நகர சபையின் ஆட்சிக் காலத்தில் முதல் இரண்டு ஆண்டுகள் தமிழ் அரசுக் கட்சியும், அடுத்த இரு ஆண்டுகள் ரெலோவும் என்ற அடிப்படையில் இணக்கம் காணப்பட்டதாகத் அறிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறானதொரு இணக்கம் எட்டப்படவில்லை என்று ரெலோ திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றது.
இது தொடர்பில் மன்னார் மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினருக்கும், ரெலோவினருக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றது. இதிலும் இணக்கம் காணப்படவில்லை.
இதன் பின்னர், மன்னார் நகர சபைக்கு ரெலோ அமைப்பினால் தயாரிக்கப்பட்ட வேட்புமனுவில் உள்ளடக்கப்பட்ட ஒருவரை நீக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு ரெலோ இணங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் முற்றியிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் மன்னாரில் தமிழ் அரசுக் கட்சி தேர்தல் பணிகளில் இருந்து முற்றாக ஒதுங்கியிருக்கும், எந்வொரு வேலையிலும் கட்சி ஆதரவாளர்கள் ஈடுபடமாட்டார்கள் என்கிற நிலைப்பாடே தோன்றியிருக்கிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையிலேயே மதத் தலைவர்கள் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்ச எடுத்துள்ளனர் என்று அறிய முடிகின்றது.
Post a Comment