
மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேச சபை உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இந்த 50 க்கும் குறையாத முஸ்லிம் வேட்பாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் களமிறங்கவுள்ளனர் என்று தெரியவருகின்றது.
வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 32 வட்டாரங்கள் உள்ளன. அந்த வட்டாரங்களில் முஸ்லிம் வேட்பாளர்களையே நிறுத்துவது எனத் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபை உள்ளிட்ட பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களில் இரட்டை அங்கத்தவர் தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினராகவுள்ள அஸ்மின் இது தொடர்பில் தெரிவித்ததாவது:
முசலிப் பிரதேச சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொள்ளவேண்டும் என்றே அங்கிருக்கும் மக்கள் விருப்பம் தெரிவிக்கின்றார்கள். அரசியல் வியாபாரிகளின் கைகளில் முசலி பிரதேச சபையினை இனிமேலும் வழங்குவதற்குத் தயாராக இல்லை என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.
‘‘முஸ்லிம் கட்சிகள் முசலிப் பிரதேச சபையினை இலக்கு வைத்து காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றன. பதவிகளில் இருக்கின்றவர்களை பதவிவிலகச் செய்து முசலிப் பிரதேச மக்களுக்கு குறித்த பதவிகள் வழங்கப்படுகின்றன.அத்தகைய பதவிகளினால் எதுவுமே செய்ய முடியாது என்று அந்தப் பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு நன்கு தெரியும். எம்மை வைத்து அரசியல் வியாபாரம் செய்கின்றவர்களை விடவும், எமது அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத் தருபவர்களிடம் சபையினைக் கையளிப்பதே சிறப்பானது’’ என்றும் மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
வடக்கிலே அரசியல் செய்கின்ற முஸ்லிம் கட்சிகளுக்கு இம்முறை வடக்கு முஸ்லிம் மக்கள் சரியான பாடமொன்றினைப் புகட்டுவார்கள் என்றும் நான் எதிர்பார்க்கின்றேன் – என்றார்.
Post a Comment