
இந்தக் காலப் பகுதியில் தேர்தல் கடமையில் 10 ஆயிரம் பொலிஸாரை ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
வேட்பு மனு தாக்கல் ஆரம்பிக்கும் நாள் முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டளை சட்டத்தின் கீழ் பொலிஸார் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
முதல் கட்ட வேட்பு மனுத் தாக்கல் இடம்பெறும் 93 உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் பெரும்பாலும் இறுதி நாளான 14ஆம் திகதி வேட்பு மனுத் தாக்கல் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்றைய தினமும் இந்தக் காலப் பகுதியிலும் முதல் கட்டமாக 10 ஆயிரம் பொலிஸார் அந்தந்தப் பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாம் கட்ட வேட்பு மனுத் தாக்கலின்போது அந்தப் பகுதிகளுக்கு வேறாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.இன்று கல்விப் பொதுத்தராதர சாதரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகின்றன. அது எதிர்வரும் 21ஆம் திகதிவரை இடம்பெறும்.
இந்தக் காலப் பகுதியில் பரப்புரை நடவடிக்கை ஊடாகவோ, வேறு நடவடிக்கைகள் ஊடாகவோ பரீட்சைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நபருக்கும் எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவோர் தகுதி தராதரம் பாராது கைது செய்யப்படுவர்.
இம்முறை ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான அனுமதி தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு மட்டுமே வழங்கப்படும். அந்த இடம் தவிர ஏனைய இடங்களில் மெகா மைக்ரோபோன், ஒலிபெருக்கி உள்ளிட்ட ஒலியை பெருக்கும் எந்த சாதனங்களையும் பயன்படுத்த முடியாது.
வாகனக்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டிக்கொன்டு பரப்புரை செய்யவும் முடியாது. அதற்கு எந்தவகையிலும் அனுமதி வழங்கப்படாது.பரப்புரைக் கூட்டத்துக்கு ஒலி பெருக்கி பாவனைக்கான அனுமதியை வழங்கும்போது கடும் நடைமுறைகள் இருக்கும். எமது அதிகாரிகள் முதலில் பரப்புரைக் கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிடுவார்.
அந்த இடம் சாதாரண தர பரீட்சை இடம்பெறும் நிலையங்களுக்கு அண்மையில் இருக்கவே கூடாது. அவ்வாறு இருப்பின் அனுமதி வழங்கப்படமாட்டாது. குறித்த பரப்புரை இடங்களில்கூட ஒலி பெருக்கிச் சத்தமானது வெளியில் செல்லாதவாறு அமையப்பெற்றிருத்தல் வேண்டும்.
ஒலிபெருக்கிகள் பரப்புரைப் பிரதேசத்தை நோக்கியதாக மட்டுமே பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
திங்கள் முதல் வியாழன் வரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும், வெள்ளி, சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மறு நாள் அதிகாலை 1 மணி வரையிலும் ஞாயிறு தினங்களில் காலை 6.00 மணி முதல் மறு நாள் அதிகாலை 12.30 மணி வரையிலுமே ஒலி பெருக்கி பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள நாடளாவிய ரீதியில் உள்ள 42 பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கி பொலிஸ் தேர்தல்கள் காரியாலயம் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தேர்தல்கள் செயலகம் ஊடாக இந்த 42 காரியாலயங்களும் நிர்வகிக்கப்படும். தேர்தல்கள் தொடர்பில் தகவல்களை வழங்க பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு மட்டும் உத்தியோகபூர்வமாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது – என்றார்.
Post a Comment