Ads (728x90)

நாட்டு மக்கள் வெயிலும், குளிரிலும் உழைத்து சம்பாதித்த பணத்தை, பணக்காரர்கள் எளிதாக கொள்ளையடிப்பதற்கு பிரதமர் மோடி வழிகாட்டுகிறார். பாஜக ஆட்சியில் மக்களின் பணத்தை, தொழிலதிபர்கள் சுருட்டிக்கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவது வாடிக்கையாகிவிட்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி 2-ம் கட்டமாக அம்மாநிலத்தில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். டெல்லியில் இருந்து நேற்று பெலகாவி வந்த அவரை கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பெலகாவியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஊழலற்ற ஆட்சியால் கர்நாடகா பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. கடந்த தேர்தலின்போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் சித்தராமையா நிறைவேற்றியுள்ளார். ஆனால் மத்தியில் ஆளும் மோடி தான் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு, ஏழைகளின் பெயரில் டெபாசிட் செய்யவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்யவில்லை. ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்வை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. ஆனால் மோடி தினமும் பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

மோடி கொண்டுவந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டு மக்கள் மிகப்பெரிய துயரத்துக்கு ஆளாகினர். மக்கள் வெயிலும், குளிரிலும் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியின் வாசலில் காத்திருந்து செலுத்தினார்கள். இதை கவனித்த பெரும் பணக்காரர்கள் எளிதாக மக்களின் கொள்ளையடித்து விட்டார்கள். நீரவ் மோடி, மல்லையா போன்றவர்கள் மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கு மோடியே வழிகாட்டுகிறார். பாஜக ஆட்சியில் தொழிலதிபர்கள் மக்களின் பணத்தை சுருட்டிக்கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவது வாடிக்கையாகிவிட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget