Ads (728x90)

வடகொரியாவுடன் வர்த்தகம் செய்ய விதிக்கப்பட்ட தடை மீறப்படுவதை கண்காணிக்க, சரக்கு கப்பல்களை இடைமறித்து சோதனையிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, அந்த நாட்டுக்கு ஐநா பொருளாதார தடை விதித்துள்ளது.

இதுதவிர அந்த நாட்டுடன் கச்சா எண்ணெய், நிலக்கரி உட்பட சில குறிப்பிட்ட பொருட்களை வர்த்தகம் (ஏற்றுமதி, இறக்குமதி) செய்யக் கூடாது என உலக நாடுகளின் நிறுவனங்களுக்கு அமெரிக்காவும் பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமைகூட வடகொரியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ள மேலும் பல சர்வதேச நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. மேலும் தடையை மீறிய பல நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் சேர்க்குமாறு ஐநா சபையை வலியுறுத்தியது.

இந்நிலையில், இந்தத் தடைகள் மீறப்படுவதைத் தடுப்பதற்காக, தனது நட்பு நாடுகளின் உதவியுடன் சரக்கு கப்பல்களை இடைமறித்து சோதனையிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த சோதனையின்போது, தடைவிதிக்கப்பட்ட பொருட்களை வடகொரியாவுக்கு ஏற்றிச் சென்றாலோ அல்லது அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பி வைப்பது தெரியவந்தாலோ அந்த சரக்கு கப்பலை பறிமுதல் செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, ஆசிய-பசிபிக் கடல் பகுதியில் தங்கள் நாட்டு கடற்படையினரை பணியில் ஈடுபடுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனிடையே, சரக்குக் கப்பலை இடைமறித்து சோதனையிடும் செயலை போராகவே கருதுவோம் என வடகொரியா எச்சரித்துள்ளது. - ராய்ட்டர்ஸ்

Post a Comment

Recent News

Recent Posts Widget