
கோழிக்கறி, மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறிக்கு மிகப் பெரிய சந்தையாக சீனா விளங்கி வருகிறது. ஆயினும், சீன மக்கள் அசைவத்திலிருந்து அதிகளவில் சைவத்திற்கு மாறிவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மக்கள் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்திற்கு மாறிவருவதே இதற்கு காரணம் என்று உணவுத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சைவ உணவுப்பொருட்கள் சீனாவில் கடந்த சில வருடங்களில் அதிகளவில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
சீனாவின் மிகப்பெரிய நகரங்களான ஷாங்காய், செங்குடு, லாசா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2012ல் இருந்து இவை மக்களின் செல்வாக்கை பெற்று வருகிறது. கடந்த 2012ல் ஷாங்காய் நகரில் 49ஆக இருந்த காய்கறி கடைகள், கடந்த வருடத்தில் 100க்கும் மேற்பட்டவையாக வளர்ச்சியடைந்துள்ளன. இந்நிலையில், இறைச்சியின் மிகப்பெரிய சந்தையான சீனாவில், அதன் இறக்குமதி குறைந்துள்ளதாக சீனா டயலாக் என்ற இணையதளம் தனது ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது.
சீனாவில் சைவப் பொருட்களின் நுகர்வு அதிகரித்துள்ளதால், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விற்பனை உயர்ந்துள்ளது. உலக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் 40 சதவிகிதப் பயன்பாடு சீன மக்களிடையே உள்ளது. கடந்த 2010 முதல் 2016 வரையில் சீனாவில் வெண்ணெய் பழம் (அவகாடோ) இறக்குமதி 1.9 டன்களிலிருந்து 25,000 டன்களாக அதிகரித்துள்ளதாக ஐ.நா. வர்த்தக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் சைவ உணவு பற்றி பிரசாரம் செய்யும் பிரபல நடிகர் ஹுவாங் ஷான் கூறுகையில், “இறைச்சியை அதிகமாக சாப்பிடுவதால், ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் பாதிப்புகள் அதிகளவில் வரும் என்பது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகரித்துள்ளதையே இந்த மாற்றம் காட்டுகிறது” என்றார்.
Post a Comment